பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்

இயற்கைக்கு என்ன குணம்? இயற்கையானது தன் கூடாரத்திலே குடியிருந்து வாழ முயற்சிக்கிற மனிதர் களைக் காத்து ரட்சிக்கின்ற அருங்குணம் கொண்டது.

என் நிலையில், என்னருளில் ஜீவித்துக் கொண்டிருக்கும் எல்லா மனிதர்களும் என் மக்களே, யாருக்கென்றும் தனியாக ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை. எல்லோரையும் சமமாக பாவிக்கின்ற தாய்க்குணம் கொண்டது அது.

அதன் காக்கும் கருணையானது கபடமில்லாதது. கலப்பற்றது. வஞ்சகம் கலவாதது. மதிமயக்கம் இல்லாதது. அதுதான் இயற்கையின் சுபாவம்.

இயற்கைக்கென்று ஒரு வழக்கம் உண்டு. குறிப்பிட்ட நேரத்தில் வருவது. குறிப்பிட்ட அளவு கொடுப்பது. குறிப்பிட்ட பொழுதில் மறைவது. இயற்கையின் திறமைக்குரிய பொருள்களான காற்றுக்குப் பருவக்காற்று என்று பெயர்.

பெய்யும் மழைக்குப் பருவமழை என்று பெயர். தாங்கும் பூமிக்குப் புண்ணிய பூமி என்று பெயர். பொழியும் வானத்திற்குத் தெய்வீக வானம் என்று பெயர். வெப்பம், குளிரை விளைவித்து நலம் சேர்க்கிற நெருப்புக்கும் ஒரு சிறப்புண்டு.

ஆக இயற்கையின் வழக்கமானது காலத்தே வருவது. கடமையைச் செய்வது. கைமாறு கருதாது உதவுவது. களைப்பாற்றி, இளைப்பாற்றிக் களிப்பூட்டுவது. தினம் ஒரு புதுமையை விளைவித்துக் கிளுகிளுப்பூட்டுவது.