பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. தொடர் போட்டிப் பந்தயங்கள்
(TOURNAMENTS)


விளையாட்டு என்பது, தனக்குரிய திறமையை தெரிந்து கொண்டு, மகிழ்ச்சி பெறுவதற்காக ஏற்பட்டதாகும்.

விளையாட்டுப் போட்டி என்பது, தனது திறமையுடன் மற்றவர்கள் திறமையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள ஏற்பட்டதாகும்.

தனது திறமை மற்றவர்கள் திறமையுடன் சரிசமமாக இருக்கிறதா, அல்லது சரிந்துபோய் கிடக்கிறதா என்பதைப் புரிந்து கொண்டு, மேலும் திறமைகளில் தேர்ச்சி கொள்ள, எழுச்சி பெற, உணர்ச்சி கொள்ள, போட்டிகள் உதவுகின்றன.

அப்படிப்பட்ட அறிவார்ந்த நிலையில், உயர்ந்த தன்மையில் அமைந்துள்ள போட்டிப் பந்தயங்களை, எப்படி, நடத்த வேண்டும் என்பதற்கு ஒரு நியதியும் நேர்மையும் இருக்க வேண்டுமல்லவா!

எல்லார்க்கும் சமவாய்ப்பு, சமஅந்தஸ்து என்ற ஜனநாயகப் பணியிலே உருவாக்கப்பட்டிருக்கும், போட்டித் தொடர் பந்தயங்கள் பற்றி, இங்கே விரிவாகக் காண்போம்.