பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/220

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

உடற்கல்வி என்றால் என்ன?


வதும், அப்படிப்பட்ட உற்சாகம் ஆளுக்கு ஆள், வயதுக்கு வயது வித்தியாசப்படுவதும் நடைமுறையில் இருக்கிறதே! இதையெல்லாம் இந்தக் கொள்கை சரிவர விளக்கவில்லை.

தேவையற்ற நீராவியை தீர்மானமாக வெளியேற்றி விடுவது கொதிகலனை (Boiler)க் காப்பாற்றத்தான் என்கிறார்கள். ஆனால் குழந்தைகளிடம் உள்ள அதிகமான சக்தியை, உடலிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக விளையாடும்போது, உடலும் வளர்கிறது, காப்பாற்றப்படுகிறது வலிமையும் அடைகிறது என்பதை ஏனோ அவர்கள் மறந்து விட்டார்கள்.

குழந்தைகளின் விளையாட்டு அவர்களை உடலால், மனதால், உணர்வால், ஒழுக்கத்தால் உயர்த்துகிறது என்பது தான் உண்மை. இரும்பாலான எஞ்சினுக்கும் குழந்தைகளுக்கும் இணைப்பாக இந்தச் செய்தியைக் கூறுவது சரியாகப்படவில்லை.

ஆகவே, விளையாட்டு என்பது, தேகத்தில் உள்ள அதிக சக்தியை வெளிப்படுத்தி விடுவதற்காக ஆடப்படவில்லை. விளையாட்டுக்கள் உடலுக்கு ஓய்வையும், உல்லாசத்தையும், புத்துணர்ச்சியையும் புதுத்தெம்பையும், பூரிப்பையும் வழங்குகிறது என்பதால், இப்படிக் கூறுகிற இந்த மிகுதி ஆற்றல் கொள்கை, மக்கள் மத்தியிலே எடுபடாமல் போயிற்று.

2. ஆயத்தக் காெள்கை (Anticipatory Theory)

இந்தக் கொள்கையைக் கண்டுபிடித்தவராக நமக்கு அறிமுகமாகி இருக்கிறவர் பெயர் காரல் குரூஸ் என்பதாகும்.