பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை



கட்டாய உடற்கல்வி பாடத்திட்டத்தில், உடலழகுப் பயிற்சி முறைகளும் ஒரு பகுதியாக அமைந்திருக்கின்றன.

மாணவ மாணவிகளின் நிமிர்ந்த உடலமைப்புக்கும், நேர்கொண்ட பார்வைக்கும்,வளமான நலம் சார்ந்த வாழ்வு நெறிக்கும் வழிகாட்டுகின்ற தன்மையில், வடிவமைப்புக் கொண்ட பயிற்சிகளின் தொகுப்பே இந்நூலாகும்.

உடற்பயிற்சியானது, உறுப்புக்களை பதப்படுத்தி, பதப்படுத்துவதன் மூலம் பண்படுத்தி, பண்படுத்தியதைத் தொடர்ந்து பலப்படுத்தி, அதன்மூலம் பண்பு நிறைந்த வாழ்வு வாழ, பயன் விளைவிக்கக் கூடிய தன்மையில்தான் உருவாகியிருக்கிறது.

அத்தகைய அருமையும் பெருமையும் நிறைந்த உடற்பயிற்சி முறைகளை, வெறுமனே உடலை இயக்கவும் முறுக்கவும், வலிந்து உழைக்கவும் கூடிய கடின வேலை என்று மாணவர்கள் எண்ணிவிடக்கூடாது. அவ்வாறு எண்ணினால், அந்தத் தவறான கருத்தை, யாரோ தகுதியற்றவர்களிடமிருந்து அவர்கள் கற்றுக் கொண்டிருப்பதாகத்தான் கருத வேண்டியிருக்கும்.

உடற் பயிற்சி என்று கூறாமல், உடலழகுப் பயிற்சிகள் என்ற தலைப்பினை நான் கொடுத்திருப்பதற்குரிய காரணமானது, உடற்பயிற்சியைத்தான் மக்கள் உடலைக் கசக்கும் வேலை என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களே! அந்த நினைவை அகற்றிடவே, இங்கு உடலழகுப் பயிற்சி முறைகள் என்று கூறி, அதற்குரிய விளக்கத்தையும் கீழே கொடுத்திருக்கிறேன்.