பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4



ஒரு பொருள் அழகாக இருக்கிறது என்றால், அது கண்ணுக்கு இனிமையாக, காட்சிக்கு அழகாக, கருத்துக்கு இதந்தருவதாக அமைந்திருக்கிறது என்பதே பொருளாகும். அப்படியென்றால், அந்தப் பொருள் சீரான தன்மையில், தேவையான முறையில், பொருத்தமாகச் செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் அர்த்தமாகும்.

அதேபோல, உடல் அழகாகத் தோற்றமளிக்க வேண்டுமானால், உடல் அவயவங்கள் சீராகவும் சிறப்பாகவும் வடிவமைப்பினைப் பெற்றிருக்க வேண்டும்.

எலும்புகளாலும் தசைகளாலும் அமைக்கப்பட்டு, தோலால் போர்த்தப்பட்டுள்ள நமது உடலுக்கு அழகு, தோலின் நிறத்தால் மட்டும் வந்துவிடுவதில்லை.

உள்ளுறுப்புக்களின் தூய்மையும், அவற்றின் ஒழுங்கான ஒருங்கிணைந்து செயல்படும் ஆற்றலும், நோயணுகா நுண்திறனுமே உடலை உயர்ந்த முறையில் வைத்திருப்பதுடன், அகத்தில் தூய்மையை மிகுதிப்படுத்துகிறது. அகத்தின் தூய்மை மிகுதியாக ஆக, முகத்திலும் புறத்திலும் பூரண அழகின் பொலிவு நிறைந்திடவும் நாம் காணலாம்.

ஆகவே, தூய உள்ளுறுப்புக்களின் செயலூக்கங்களில், திறட்சி மிகுந்த தசைப்பகுதிகளில்தான், தேகத்தின் அழகு திரண்டு காணப்படுகிறது.

அத்தகைய தசைப்பகுதிகள் :- மார்புத் தசைகள், இருதலைத் தசைகள், முத்தலைத் தசைகள், முன்கைத் தசைகள், தொடைத் தசைகள், கெண்டைக்கால் தசைகள், தோள்புறத் தசைப் பகுதிகள், முதுகுப்புறத் தசைகள் ஆகும்.

தசைப் பகுதிகள் தகுதியுற்று வளர்ச்சி பெற்றால்தான், உடல் உன்னதமாகத் தோற்றமளிக்கும். அத்தகைய அமைப்பையே அழகான உடலமைப்பு என்கிறாேம்.