பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

10




“நமது உடல். இது நமக்குச் சொந்தமானது. நமக்கு நிதமும் வாழ்வளிப்பது, நம்மை மகிழ்விப்பது, நம்முடன் தொடர்வது. இந்த சுதந்திர பூமியை சொர்க்க பூமியாக்கிக் காட்டுவது.”

இப்படி ஒர் எண்ணத்தை நமக்குள் ஏற்படுத்திக் கொண்டு விட்டாலே, பேதைத்தனம் பின்னங்கால் பிடரியில் பட, ஒடி ஒளிந்து கொள்ளும். யார் நினைக்கிறார்கள் இதை? யார் முயல்கிறார்கள் இப்படி?

யாரைச் சொல்லியும் குற்றமில்லை!

நாம் வாழ்கின்ற உலக அமைப்பு அப்படி. சமுதாயச் சூழ்நிலை அப்படி.

நரகமான நாகரீகம்

அறிவின் வெளிப்பாடுகளாக எந்திரயுகம் உலகுள் அமைந்தது. உட்கார்ந்து கொண்டே உலகை அளக்கும் யுக்திகள். படுத்துக் கொண்டே பல சுகங்களையும் வருவிக்கும் வசதிகள் பெருகித் தொலைத்தன.

'பணம் இருந்தால் போதும். படைத்தவனையே அழைத்துப் பாதம் அமுக்கி விடும் வேலைக்காரனாக்கி விடலாம்’ என்ற பெரு மதர்ப்பு பூதாகரமாக மக்கள் மனதிலே புகுந்து விட்டது.

அதனால், உடல் உழைப்பு குறைந்து விட்டது உடலின் நினைப்பே மறைந்துவிட்டது.