பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




அவர்கள் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. நியாயம் இல்லாமலும் இல்லை. நிலைமையுணர்ந்து தான் பேசுகின்றார்கள். ஆனால் ஒரு சிறு திருத்தம்.

படகு ஒன்று நன்றாகத்தான் இருக்கிறது. பயணம் செய்யும் பொழுது, எந்தவிதத் தடுமாற்றமும் இல்லை. சந்தோஷம் தான். அதில் ஒரு சிறு விரிசல் உண்டாகிறது. அதனால் எதுவும் கெட்டு விடப்போவதில்லை. படகையும் பழுது பார்க்காமல், நாம் ஒட்டிக் கொண்டேயிருந்தால் எப்படி?

நாம் செய்கின்ற வாழ்க்கைப் பயணத்திற்கும் உடலாகிய படகு உதவுகிறது. பராமரித்தால் தானே படகினால் பயன் உண்டு?

ஒரு மனிதர் உடற்பயிற்சி செய்யாமல், உடல் திடகாத்திரமாக இருக்கிறது என்கிறார். உண்மைதான். உடலில் குறைகள் எதுவும் நிகழவில்லை. குறுகுறுக்கும் நோய்களின் சிறுதடம் கூட எழவில்லை. உண்மை தான். அது அவரது அதிர்ஷ்டம்.

ஆனால், நாட்கள் ஒடிக் கொண்டிருக்கின்றனவே! நாளாக நாளாகத் தசைகளில் தளர்ச்சியும், செயல்களிலும் வீழ்ச்சியும் உண்டாகின்றனவே? ஒவ்வொரு நாளிலும் முதிர்ச்சி முதுகில் ஏறி கனத்துக் கொண்டு வருகிறதே? தொடர்ந்து தளர்ச்சி வந்து கொண்டேயிருந்தால், தேகம் என்ன வாகும்?

தொடருகின்ற தளர்ச்சியை, தொடர்ந்து சுமந்து கொண்டு நலிந்து வாழ்ந்து வருகிற மனிதர்கள் முதல் வகை. அதாவது தளர்ச்சியை மாற்ற முயலாமல், வாழ்கின்றவர்கள் இவர்கள்.