பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் கவிமின்னலின் மின்சாரம், கவிச்சாரமாய், கருத்துப் பாரமாய், தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் இறங்கியது; அந்தக் கருத்துச் சாரலில் நந் தமிழர் மனமெல்லாம் கிறங்கியது; பிடித்திருந்த மடமை இருள் விலகியது; செல்லும் நெறி எதுவெனத் துலங்கியது! 'ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? அறிந்து கொள்வீர்!" என நம் மக்களை நோக்கிக் கைகூப்பிக் கசிந்துருகி வேண்டியவர் நம் கவிஞர்பிரான் கவிராயர் காலத்தில், ஒரு பகுத்தறிவு இசைப் பாவலன் அவசர அவசியமாய்த் தமிழர்க்குத் தேவைப்பட்டான். கடுவெயிலின் சுடுவெக்கை தணிக்கக் கோடைக் காலத்தில், நுங்கு பனைமர உயரத்தில் பயிர் ஆவது போல, மூடத்தனத்தின் முடைநாற்றம் போக்க, ஒரு மணமலர் 'பூவிளைவாடி”யில் பூத்தது; காலம் பூக்க வைத்தது கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போக, வள்ளலார், இயல் தமிழை'க் கையில் எடுத்தார். கவிராயர், 'இசைத்தமிழை'க் கையில் எடுத்தார்: பெரியார், அண்ணா, கலைவாணர், கலைஞர் எனும் நான்கு வயிரத் தூண்களின்மேல், உடுமலையாரின் 'கவிதை மண்டபம்' உருவாயிற்று. இந்நால்வரின் கருத்துக்கள் தந்த அழுத்தத்தால், கவிஞர் பெருமானின் உள்ளம் "வைரம் அடித்த களம்' ஆயிற்று. புதுவை தந்த கவிதைப் புயல், பாவேந்தரின் பாக்கள், கவிஞர்க்கு மேடையிலே வீசும் மெல்லிய பூங்காற்றாய் இதம் அளித்தது. கவிஞரின் ஒவ்வோர் அடியும், கயமையின் கன்னத்தில் விழுந்த ஒவ்வோர் அடி அவர் கவிதையின் கருத்து வீச்சு ஒவ்வொன்றும், கயமையின் மார்பில் வீழ்ந்த சாட்டை வீச்சு!! நாட்டுப் பாடலில் பூட்டிக் கிடக்கும் நாதநயத்தை, ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒலிக்க வைத்த கொங்கு நாட்டுப் 'பாட்டாளி' இவர்! 'சும்மா இருந்தால் சோத்துக்கு நஷ்டம்' - கவிஞரின் இந்தப் பாடலை இசைக்கும் போதெல்லாம் இசைநயம் இதயத்துள் தேன் ஊற்றுகிறது. கேட்கும் போதெல்லாம் கருத்து வளத்தால் உள்ளம் கிளர்ச்சியுறுகிறது!