பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளித்தபின், பல பாடல்களுக்குச் சந்தம் அமைப்பார் என்னும் அரிய செய்தியை, கவிஞர் திருமகனார் இராமகிருஷ்ணன் அவர்களும், சுப்பிரமணியம் அவர்களும் கூறக் கேட்டோம். அதனால்தான், சந்தச்சுவை கவிராயர் பாடல்களில் பந்தி பந்தியாய் ஊர்வலம் போகின்றன. கவிதையில், எந்தச் சுவையும் சந்தச் சுவைக்குப் பின்னால், கைகட்டிச் சேவிக்க உரியவை என்பது உடுமலையாரின் கவிதைகளை ஒருமுறை படித்தாலே உருவாகும் கருத்து எனலாம். கடை எதுகைகள் இவருக்குக் கனி எதுகைகள் சொற்களை இசைத் தேனில் முழுக வைத்து, முக்கி முக்கித் தோய்த்து எடுத்து, அவற்றைப் பிழியாமலே தன் பாடல்களில் பொத்தி வைத்து விடுகிறார் கவிஞர் பிரான், இதனால்தான் கவிராயரின் பாடல்கள் காலத்தை வென்று இப்படித் தித்திக்கின்றன: உடுமலையாரின் பெருமை, இந்நாட்டின் இன்றைய இளைஞர்கள் பலர்க்குச் சரியாக உணர்த்தப்படவில்லையெனலாம். திரைக் கவிதை வரலாற்றில், அவர் அமர்ந்திருந்த சிம்மாதனம், தொல்பொருட்காட்சிச் சாலைக்குக் கொண்டு சென்று விடாமல் இருக்க, இப்பதிப்புப் பெரிதும் உதவும் என்று நம்புகின்றோம். மோனைகள் முனை முறியாமல், எதுகைகள் இதழ் ஒடியாமல், சந்தங்கள் குதிபோடும் இந்த இனிய கவிதைகளை எதிர்காலத் தலைமுறைக்குச் சுமந்து சென்று அறிவிக்க இப்பதிப்பு மிகவும் உதவும் என்று நாங்கள் நம்பி நிற்கிறோம். பாரதியின் புகழ் காலஞ்செல்லாது, காலம் செல்லச் செல்ல மிக்கோங்கிக் கொண்டேயிருப்பது போல, உடுமலையாரின் புகழும் நாளும் நாளும் மேலோங்கி நிற்கும்; அதற்கு இப்பதிப்பு மிகவும் உதவி நிற்கும் ' மொழித்தவம் இருப்பவர்களுக்குக் கவிதை வாய்க்கிறது. மொழியை நோக்கி இவர்கள் இருந்த தவம் முற்றுப் பெற்றபின், மொழி இவர்களிடம் தவமிருக்கத் தொடங்குகிறது - கவிதைகளுக்காக! உடுமலையாரும் முன்பு மொழியின் முன் தவமிருந்து, பின்பு மொழி இவரிடம் தவம் இருக்கச் செய்துவிட்ட பேறாளர் இசையின் பரவசம்; எதுகையின் கும்மாளம்; கருத்துகளின் ஊர்வலம் - ஓயாது காணவேண்டுமெனில் கவிராயரின் கவிதைகளைக் கற்க வேண்டும்.