பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நூற்றாண்டில் தமிழ்கூறு நல்லுலகத்துச் சான்றோர்களால் இலக்கிய இலக்கண இருதுறைகளிலும் ஒப்பற்று விளங்கும் ஓர் ஒளிப்பரிதியெனப் பாராட்டப் பெற்றவரும், மரபுக் கவிதையும் புதுக்கவிதையும், மாட்சியுற வரையும் பைந்தமிழ்ப் பாவலரும், சிறுகதை, கட்டுரை, காப்பியம் ஆகியன சிறப்புறச் செய்யும் செம்மொழிக் காவலரும் செந்தமிழ் வித்தகரும், கம்பன் கலைமணி'யும் பட்டிமன்றப் பாட்டரங்க நற்றமிழ் நாயகரும், பொள்ளாச்சி ந.க.ம.கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரும் எம் தந்தை அவர்களது பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், எம்மிடத்து மாறா அன்புடைய பெருந்தகையுமான முனைவர் தமிழ்த்திரு. அமுதன் அவர்களைத் தலைவராகவும், எம் தந்தை அவர்களோடு பல ஆண்டுகள் உடன் இருக்கும் பேறு பெற்றவரும் எமக்கெல்லாம் உற்ற நண்பரும், ஆனைமலை அரசு மேனிலை பள்ளித் தலைமையாசிரியருமான நல்லாசிரியர் புலவர் ப. வீரப்பனார் அவர்களையும், தலைசிறந்த தமிழ்த்தொண்டரும், பட்டிமன்ற நகைச்சுவை நாவலரும் பண்பின் திருவுருவாளருமான தமிழாசான் புலவர் கரேந்திரன் அவர்களையும் உறுப்பினர்களாகவும் கொண்ட பதிப்புக் குழு ஒன்றினை அமைத்தோம். இம்மூன்று புலவர் பெருமக்களும் இப்பதிப்புக் குழுவினர் ஆகி மெய் வருத்தம் பாராது, கருமமே கண்ணாகி இதுவரை வெளிவராத பல பாடல்களையும் அரிதின் முயன்று தொகுத்து அழகிய நூல் ஒன்றினைத் தந்துள்ளார்கள். இப்பெரும் பணிக்காக இம்மூவரும் உழைத்த உழைப்பு அரியது; பெரியது; இவர்கள் மூவரும் எங்கள் குடும்பமும் தமிழ்மக்களும் செலுத்தும் நன்றிக்கு எந்நாளும் உரியவர் ஆகின்றனர். எங்கள் தந்தையாரின் தண்டமிழ்ப் பாடல்களை அட்டியின்றித் தட்டாமல் தட்டச்சுச் செய்து தந்த திருமதி. தமிழ்ச்செல்வி யேசுதாசு அவர்களுக்கும் எங்கள் வாழ்த்தினையும், நன்றியினையும் உளமார உரியனவாக்கி மகிழ்கின்றோம். உடுமலை நாராயண கவிராயர் அவர்கள் மணிமண்டபப் புகைப்படத்தை வழங்கி உதவிய பொதுப்பணித்துறைப் பொறியாளர் உயர்திரு. மணியன் அவர்கட்கும் எங்கள் மனமார்ந்த நன்றியினை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த இசைத் தமிழ்ச் செல்வங்களில் சில, முன்பே உடுமலை நாராயணகவியின் பாடல்கள்' என்னும் பெயரில் வெளிவந்துள்ளன. ஆனால் அவற்றிலெல்லாம் காணக் கிடைக்காத புதையல் போன்ற எங்கள் தந்தையாரின் அருந்தமிழ்ப் பாக்கள் பல இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன என்பதைத் தமிழ்மக்களின் திருமுன்பு வைக்கிறோம். xii