பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர்களின் புகழ்வெள்ளத்தைக் காலவெள்ளம் அடித்துச் சென்று விடாதபடி மணிமண்டபம் அமைத்த கலைஞர் மாண்பினை எவ்வளவு போற்றினும் தகும்! தகும்! உடுமலைப் பெருவணிகரும் செல்வருமான அமரர் குருநாதசாமி செட்டியார் அவர்களது திருமகனார் அமரர் இராதாகிருட்டிணன் அவர்கள் பொறியாளராகப் பணியாற்றியவர். பின்னாளில் கார்த்திகை மன்றத்தைக் காத்தவர். தமிழ்க் கவிஞர்களையும், தமிழறிஞர்களையும் அழைத்துப் பெருமைப்படுத்தியவர் இப்பெருமகனார். எம் தந்தையின் பாடல்கள் பலவற்றைத்தேடித் தந்து உதவியவருமாவார். தந்தையார் உடுமலை செல்லும்போதெல்லாம் இவர்களுக்கிடையே சந்திப்பும் உரையாடலும் நிகழும். பூவிளைவாடி, அப்பாய் செட்டியார் என அழைக்கப்பட்ட அமரர் திருவேங்கடஞ்செட்டியார், அனந்தராம ஆச்சார், சின்னமுத்து நாயுடு ஆகியோர் எம்தந்தை அவர்களின் உழுவல் அன்பர்களில் குறிப்பிடத் தக்கோராவார். இந்நூல் உருவாகப் பொருளால் உதவிப் பயன்மரம் உள்ளுர்ப் பழுத்ததுபோல் தம் செல்வத்தைப் பயன்படுத்திய கரூர் வள்ளல் திரு. கே.சி. பழனிசாமி அவர்கட்கும். இந்நூல் உருவாக அறிவாலும், உழைப்பாலும் உதவியுள்ள செந்தமிழ் வித்தகர், கம்பன் கலைமணி, முனைவர் அமுதன் அவர்கட்கும், அவர் தலைமையில் இயங்கிய பதிப்புக் குழுவினர்க்கும் மீண்டும் ஒருமுறை நெஞ்சு நிறைந்த நன்றி மலர்களைப் படைக்கின்றோம். அவர்களுக்குச் செலுத்த நன்றியைத் தவிர, உயர்ந்தது ஒன்றும் எங்களுக்குக் கிட்டவில்லை! எங்கள் தந்தையார் தந்த இந்த அருந்தமிழ்ச் செல்வத்தைத் தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பணிவோடும், பரிவோடும் படைப்பதில் பெருமகிழ்வும் பெருநிறைவும் அடைகின்றோம். "தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை' xiv