பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிவாணர் மதுரையில் வாழ்ந்தபோது அங்கு முகாம் இட்டிருந்த டி.கே.எஸ். நாடகக் குழுவினரோடு ஏற்பட்ட தொடர்பு, கலைவாணரோடு நெருங்கிய பழக்கம் உண்டாக்கித் தந்தது. கலைவாணர் கவிவாணரின் அளப்பரிய பேராற்றலை, அவரோடு அளவளாவிய போதெல்லாம் உணர்ந்தார். பிரிக்க ஒண்ணாத நட்பாய் இருவர் கலைநெஞ்சங்களும் இணைந்தன. கிராமபோன் கம்பெனிக்குப் பாட்டெழுதித் தர வருமாறு இயக்குநர் ஏ. நாராயணன் சென்னைக்கு அழைத்தார். அப்படியே திரைப்படப்பாடல் உலகிலும் கவிராயர் நுழைந்தார். முதன்முதலாகக் கவிதை எழுதிய திரைப்படம் 'சந்திர மோகனா அல்லது சமூகத் தொண்டு'! கலைவாணர் தொடர்பால் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் முதலிய திராவிடர் இயக்கத்தின் மாபெரும் தலைவர்கள் நட்பனைத்தும் கவிராயர்க்குக் கிட்டிற்று. அதனால் திராவிடர் இயக்கப் பற்றும் பகுத்தறிவுப் பார்வையும் எதையும் அப்படியே ஏற்காது, ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்கள் எழுப்பி, ஆராயும் நுண்நோக்கும் வந்து வாய்த்தன. இச்சிறப்புக்களே, கவிராயரின் பாடல்கள் மக்கள் மனங்களை ஈர்த்து, அவர்கள் உள்ளங்களில் தனியிடத்தைப் பெறப் பெரிதும் உதவின. 'கலைவாணரும் கவிராயரும் இணைந்து தமிழகத்தில் ஒரு கருத்துப் புரட்சியையே உருவாக்கினார்கள்' என்பது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உன்னதக் கருத்துரை. செந்தமிழர் நெஞ்சமெல்லாம் திறைகொண்ட கவிராயருக்குப் பெரியார் பெருந்தொண்டர் கலைமாமணி என்னும் ஒப்பரிய பட்டங்கள் எல்லாம் வீடு தேடி வந்தடைந்தன. தமிழ் உள்ளளவும் அதில் இசை உள்ளளவும் சாகாவரம் பெற்ற பாடல்களை எழுதிக் குவித்த உடுமலை நாராயண கவிராயர் அவர்கள் 23.05.1981 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்கள். 'என்றும் உள. தென்றமிழ் இயம்பி இசைகொண்ட நம் கவிஞர் பெருமான் தமிழர் நெஞ்சில் இன்றும் வாழ்கிறார், என்றும் வாழ்வார்.