80
இப்படிப்பட்டவர்களால் தான் மிகச் சாதாரணமானவர்களால் துவக்கப்பட்ட தி. மு. கழகம் அரசாளும் பொறுப்பேற்றிருக்கிறது.
முஸ்லிம் பெருங் கவிஞர் இக்பால் ஒரு கவிதை மூலம் கூறினார்.
சிட்டுக் குருவிகள் வல்லூறைப் போல் கொத்தும் திறனற்றவை. கூர்மையான நகமற்றவை; வல்லூறை விட பலத்தில் குறைந்தது.
ஆனால் ஒருகாலம் வரும்; சிட்டுக்குருவிகள் வல்லூறை வெல்லும் காலம் வரும்! பாமர மக்கள் பாராளும் காலம் வரும்!
--என 25 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பாடினார்.
சிட்டுக்குருவிகள் வல்லூறை வென்றதுபோல் பாமரர்கள் இப்போது பாராள்கிறார்கள்.
சிட்டுக்குருவிகள் வல்லூறை வென்றது மட்டுமல்ல. சிட்டுக்குருவிகளின் ஆட்சியை எப்படிக் கவிழ்ப்பது என்று வல்லூறுகள் யோசித்துக் கொண்டிருக்கின்றன இப்போது!
இந்தச் சிட்டுக் குருவிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் ஆற்றலே கூட வல்லூறுக்கு இல்லாத போது--அதைக் கவிழ்ப்பது எப்படி?
கவிழ்ப்பேன் எனப் பேசுவது ஆசையின் விளைவே தவிர ஆகக் கூடிய காரியமல்ல! நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் நாம் சிட்டுக் குருவிகள் தான் என்பதை மறக்கவில்லை! அதை மறந்தால்--நாங்கள் கவிழ்ந்தோம்! அதை மறக்காதவரை நாங்கள் கவிழ மாட்டோம்.