84
கட்சிகளில் ஆட்சிகள் ஆங்காங்கு அமைந்துள்ளதால்--இயங்க
முனைந்துள்ள காலம் இது. இத்தகைய நேரத்திலே வெங்கட்ராமன் டில்லி செல்கிறார்.
பல்வேறு கட்சிகளிடையேயும் ஒன்றுபட்ட உணர்வையும், தோழமையையும் உருவாக்குவதில் அவர் பணி அவசியப்படும். இத்தகையதொரு தோழமை உணர்வை ஏற்படுத்துவதில் தமிழகம் வெற்றி கண்டுள்ளது. இன்றைய விழாவே அதற்கொரு சான்று.
ஒரு கட்சியை மற்ற கட்சி தாழ்வாய்ப் பேசுவது ஜனநாயகம் அல்ல. இத்தனை நாள் ஆட்சி செலுத்தினீர்கள்; இதுவரை போதும்; எங்களிடம் ஆட்சியை விடுங்கள். இன்னும் வேகமாகக் காரியங்களை நிறைவேற்றுகிறோம் என்று கூறுவதே ஜனநாயகமாக விளங்கும் தத்துவம்.
தமிழகத்திலே நாம் இவ்விஷயங்களில் உறுதியாக இருக்கிறோம்.
டாக்டர் லட்சுமணசாமியின் வாழ்க்கையே சிறந்த ஒரு எடுத்துக் காட்டு. அவரது வாழ்நாளில் எத்தனை விதமான அரசியல் லாபங்கள் அவரைத் தேடி வந்திருக்கும். அதற்கெல்லாம் அசைந்து கொடாமல் என் வழி நான் செல்கிறேன் என்று இருந்துவிட்டார். அலைபாயும் கடலில் திசைக்காட்டும் கருவியில் பார்வையைச் செலுத்தியபடி கலம் செலுத்தும் தேர்ந்த மாலுமி போல் டாக்டர் லட்சுமணசாமி இருந்துள்ளார்.
நாம் நமது குறிக்கோள்களில், நமது அரசியலில் உறுதியுடையவர்களாக இருக்கிறோம். அரசியல் ஸ்திரத்தன்மையும், உண்மை உணர்வும் இங்கு மிகுந்துள்ளது. மற்றவர்கள் நம்மிடமிருந்து பெறவேண்டிய பாடங்களில் இதுவும் ஒன்று.