பக்கம்:உணர்வின் எல்லை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடகக்கலை

93

சீதா கல்யாணம் நாடகத்தையும் இயற்றியுள்ளனர். தமிழ் நாடகக் கலை வளரச் சிறந்த தொண்டாற்றிய இப் பெண்மணிகளை நாம் நன்றி உணர்ச்சியோடு நினைவு கூர்வோமாக!

தமிழ் மொழியில் பிற்காலத்தில் தோன்றிய பள்ளு, குறவஞ்சி முதலியனவும் ஒருவகைச் செய்யுள் நாடகங்களே. இத்துறையில் குற்றாலக் குறவஞ்சியும் முக்கூடற்பள்ளும் அழியாப் புகழ் பெற்றவை.

19ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு ஆங்கில நாடக இலக்கியப் போக்கை ஒட்டித் தமிழ் நாடகங்கள் பல, மொழி பெயர்ப்புக்களாகவும் தழுவல்களாகவும் தோன்றின. இவ்வகையில் தமிழில் செய்யுள் வடிவில் தோன்றிய சிறந்த நாடகம், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை பாடிய மனோன்மணியமே. சுந்தரம் பிள்ளை தோன்றித் தமிழ்த் தாய்க்கு அணி செய்த இக்காலத்திலேதான், பரிதிமாற் கலைஞராகிய வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியாரும் தோன்றித் தமிழ் மொழியில் நாடகத்திற்கு இலக்கணமில்லாக் குறையைத் தம்முடைய ‘நாடகவியல்’ என்னும் நூல் வாயிலாக நீக்கினார். தாம் எழுதிய இலக்கணத்திற்கேற்பச் சில சிறந்த நாடக நூல்களை இவர் உரையிலும் பாட்டிலும் இயற்றினார். இவ்விரு பெரியார்களின் அடிச்சுவட்டையே, பின்பற்றித் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு அருந்தொண்டு ஆற்றிய பெரியார் பம்மல் சம்பந்த முதலியாரே ஆவர். தமிழ் நாடகக் கலைக்குத் தொண்டு செய்த சான்றோர்களுள் இவர்க்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்றே