பக்கம்:உணர்வின் எல்லை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

உணர்வின் எல்லை

படுத்திக்கொண்டு, தவறான கருத்துக்கள் பல நாட்டில் புகுந்தன; தேவையற்ற சடங்குகள் பல வாழ்க்கையில் மலிந்தன; பொருளற்ற தீய நிகழ்ச்சிகள் பல, சமயத்தின் பெயராலும் கடவுளின் பெயராலுங்கூட நடக்கத் தொடங்கின. இந்நிலை கண்டார் திருவள்ளுவர்; அவர் உள்ளம் பொங்கியது; எண்ண அலைகள் முழக்கமிட்டன; தாம் சிறந்த உலகில் நடக்கும் அநீதச் செயல்களின் தீமையை உலகம் உணர்ந்து உய்யவேண்டும் என்று ஆத்திரம் கொண்டார்.

அவர் ஏட்டையும் எழுத்தாணியையுமே துணையாகக்கொண்டு, ‘கத்தியின்றி ரத்தமின்றி,’ கருத்துப் புரட்சி செய்யத் துணிந்தார். அதன் விளைவை—பண்பை—பயனை இன்றும் நாம் அவர் இயற்றிய இணையில்லா இலக்கியத்தில் காண்கிறோம்.

நாடெங்கும் வேள்வித் தீ; புகைப்படலம்; ‘யாகம்’ என்ற பெயரால் ஆயிரக்கணக்கான வாயில்லா உயிர்கள் கொல்லப்படுகின்றன; வதைக்கப்படுகின்றன. கொலை—உயர்க்கொலை—படுபாதகக் கொலை! பார்த்தார் வள்ளுவர்! ‘காக்கை குருவி எங்கள் சாதி; நீள்—கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்க நோக்கக் களியாட்டம்!’ என்று, ‘அனைத்துரையும் தம்முயிராய்ப் போற்றி வாழ வேண்டிய ஆறறிவு படைத்த மனித சமுதாயம் இப்படி இயற்கைத் தாயின் குழந்தைகளை வெட்டிக் கொல்லும் ஈனவாழ்க்கை வாழலாமோ?’ உள்ளம் துடித்தார். ஆம், புத்தரைப்போல மனம் துடித்-