பக்கம்:உணர்வின் எல்லை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்த்தும் கலை

121

விடரகத்து அருமிசைக்கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனியைத் தனக்குக் குறியாது கொடுத்த கருணைத்திறத்றை நினைத்து உருகினார், அமிழ்தினுமினிய தமிழ் பாடும் மூதாட்டியாராகிய ஒளவையார். அவர் உள்ளத்தில் பெருக்கெடுத்தநன்றி உணர்ச்சி, அதிகமானைப் பார்த்து,

'நீல மணிமிடற் றொருவன் போன

மன்னுக பெரும நீயே!' [1]

என்று வாயார, மனமார வாழ்த்தச் செய்தது. 'கண்ணுதற் பெருங்கடவுளைப் போல வாழ்க!' என வாழ்த்துப் பெற்ற அதிகமான், மன்பதையில் பிறந்தோருளெல்லாம் தலைசிறந்த பேறு பெற்றவன் அல்லனோ?

இதுகாறும் நாம் கண்டாங்கு, வாழ்த்தும் கலையெனக் கருதி வாழ்த்தும் கலையைப் பயனுறவளர்த்த தண்டமிழ்ப் புலவர் திறத்தைத் தமிழ் இலக்கிய உணர்வோடு உள்ளுவார் நெஞ்சம் உவகைக் கடலாதல் உறுதி.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து காசினியிற் சிறந்து வளர்ந்து மூத்து விளிந்தோர் கோடானு கோடி பேர். அவர்களுள் சான்றோர் வாழ்த்துரைகளைப் பெற்று அழியாப் புகழ் கொண்ட பெருமைசால் பெரியோர் ஒரு சிலரே ஆவர். அத்தகையோருள் ஒருவரே இம்மணி விழா மலருக்குரிய தண்டமிழ் அறிஞர். அவர்தம் தொண்டும் புகழும் வாழ்க! வெல்க!


  1. 1, புறம் 91