பக்கம்:உணர்வின் எல்லை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருத நிலத் தலைவன்

127

தலைசிறந்த குறிக்கோள் என்று போற்றிய தமிழ் நாட்டுத் தலைமகனிடத்திலா இத்தகைய குறைபாடு வேர்கொள்ள வேண்டும்? அதையோ சான்றோர்களாகிய புலவர்கள் தம் செந்நாவால் விரித்து விரித்துப் பாடவேண்டும்' என்ற ஐயமும், வருத்தமும் நம் அகத்தின்கண்ணே எழுதல் கூடும். ஆனால், இந்த இடத்தில் நாம் ஓர் உண்மையை ஓர்தல் வேண்டும். மக்களின் வாழ்க்கையைக் கவிதையாய்ப் பாடுகின்ற கவிஞன் குறிக்கோள் உடையவன் தான். எனினும் குறிக்கோளைப் போற்ற ஆர்வமிருக்கும் ஆற்றலில்லாக் காரணத்தால் தவறி விழும் மிகமிகப் பெரும்பாலோரைக் கொண்டதே இவ்வுலகம் என்பதை அவன் அறியாதவனல்லன். மேலும், அவ்வாறு தவறி விழும் வீழ்ச்சிக்கு உலகில் ஆடவர் இரையாகின்றனரே யன்றித் தீந்தமிழ் நாட்டுத் தெய்வக் கற்புடை மகளிர் அக்குறைக்கு ஒருபோதும் இரையாகாத திறம் படைத்தவர் என்பதையும் அகத்திணை இலக்கியம் யாத்த சங்ககாலச் சான்றோர் அறிவர்.

'வாழ்க்கையின் ஆராய்ச்சியே சிறந்த இலக்கியம் ; கண்ணெதிரே காணும் உலகமும், கவிஞன் படைக்கும் காவிய உலகமும் ஒன்றுக்கொன்று பெரிதும் முரண்பட்டவையல்ல,' என்று பிறநாட்டுப் பேரறிஞர் கூறுவர். அவர்தம் ஆய்வுரைகளையும் நம் மனத்தகத்தில் இருத்திக்கொண்டு சங்க இலக்கியத்தை பழந்தமிழ் அகத்திணை நூல்களை - நாம் ஆராய்வோமானால் உண்மைக்கு மாறாகா வகையில்-உலகப் போக்கை முற்றிலும் மறைக்காத நெறியில்-