பக்கம்:உணர்வின் எல்லை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

உணர்வின் எல்லை

வருகின்றான் ; தலைவியின் ஊடலை உணர்கின்றான்; அதைத் தீர்க்க முயல்கின்றான்; ‘என்பால் பிழையுளதாயின் நீ சினங்கொள்ள உரிமையுண்டு,’ என்று பணிந்து பேசுகின்றான்; தன் குற்றமறிந்து மன்னிப்பும் வேண்டுகின்றான். இவையனைத்தும் தலைவன் உள்ளத்தில் ஆழ்ந்திருந்த உண்மைக் காதலைப் புலப்படுத்துகின்றன அல்லவா?

மேலும், தலைவன் பரத்தையிடமிருந்து பிரிந்து வந்த போது தலைவி ஊடிக்கூறும் சொற்கள் அவள் உரிமை உணர்வைக் காட்டுகின்றன.

‘உம்மை இங்கு வரச்சொன்னவர் யார்? நீர் எம்மைத் தொடல் வேண்டா; நீ யார் எம்மைத் தொட? பிரிவாற்றது யாம் வருந்துகின்றோம்; உமக்கு யாம் அடிமையோ?’ என்றெல்லாம் தலைவி கேட்கின்றாள். சங்ககாலத் தமிழ் மக்களின் வாழ் வின் கூறுபாடுகளை அறியாதார், ‘தலைவி’ தலைவன் வீட்டில் அடிமையாக வாழ்கின்றாள், என்று எண்ணுவர். ஆனால், தமிழ்த் தலைவி வாழும் வீடு அவள் வீடேயாகும். எம்மனை என்று தான் வாழும் தன் வீட்டைப் பெருமையோடு அவள் கூறிக் கொள்கிறாள்.

மருதத் தலைவனுடைய பண்பு நலங்கள் பலவற்றைத் தெரிந்து கொள்ளும் வகையில் பயன்படும் பாத்திரங்களாக அகத்திணை இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளோர். அருமைத் தலைவியும், அறிவுசால் தோழியும், யாழ்வல்ல பாணனும், இற்பரத்தை