பக்கம்:உணர்வின் எல்லை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருத நிலத் தலைவன்

131

காதற்பரத்தை என மூவகைப்பட்ட இருமனப் பெண்டிரும் ஆவர். இவர் யாவரும் மருதத் தலைவனது உள்ளப்பாங்கினை நமக்கு ஒவ்வொரு வகையில் விளக்கிவைக்கின்றனர்.

தலைவனது பரத்தைமைப்பண்பு வாழ்வுபெற வழிவகுத்துக் கொடுப்பவன் பாணன்தான். இசை பாடித் தலைவனை மகிழ்விக்கவந்த அவன், தன் தொண்டின் வரம்பிகந்து, தன்னைப்போலக் கலைத் துறையில் சிறந்து விளங்கிய பரத்தை ஒருத்தியின் அழகுவலையில்—கலைவலையில்—விடுதலறியா விருப்பு வலையில்—தலைவனைச் சிக்கவைத்தான்; தலைவன் பரத்தை வீட்டில் போய்த் தங்குவதற்குரிய ஏற்பாடுகளையெல்லாம்—திருமண ஏற்பாடுகள் போல—விரிவாக நடைபெறச் செய்தான். குறிப்பிட்ட நாளில்— குறிப்பிட்ட நேரத்தில்—பரத்தை வீட்டிற்குச் சென்று புதியவனாக வரும் தலைவனை வரவேற்கப் பாணன் விரைந்தான்; பரத்தை வீட்டிற்குப் போக வேண்டிய பாதையின் வழியில் இருந்தது. தலைவிவீடு. எனவே, தலைவியின் கண்ணில் அகப்படாமல் கள்ளன் போல ஒளிந்து போகக் கனவு கண்டான் பாணன். ஆனால், எப்படியோ எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி, அவன் கள்ளத்தனத்தைத் தலைவியறிந்து நகையாடும்படி செய்துவிட்டது.

கையிலே யாழொன்றை ஏந்திக்கொண்டு வீதி வழியே விரைந்து கொண்டிருந்தான் பாணன். அப்பொழுது எதிர்பாராதவகையில் கன்றொன்றை ஈன்ற பசு குறுக்கே ஓடி வந்தது; பாணனைக்கண்டு