பக்கம்:உணர்வின் எல்லை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

உணர்வின் எல்லை

மருண்டு பாய்ந்தது; அஞ்சினான் பாணன். வேறு வழியின்றி, செய்வதறியாத நிலையில் தலைவியின் வீட்டிற்குள்ளேயே நுழைந்து கலங்கி நின்றான். கண்டாள் தலைவி; அவள் மனத்தில் இரக்கம் தோன்றவில்லை; எள்ளி நகையாட வேண்டும் என்ற எண்ணமே தோன்றியது. உடனே அவள் தன் மனக்கருத்தை இகழ்ச்சிக் குறிப்போடு பாணனிடம் சென்று தெரிவித்தாள். ‘பாணனே, இந்த வீடு அன்று உங்கள் வீடு; அதோ அந்தத் தெருவில் உள்ளது,’ என்றாள். பாணன் நாணித் தலை கவிழ்ந்தான்.

இந் நிகழ்ச்சியைத் தலைவி மறக்கவில்லை. சில நாள் கழித்துத் தலைவன் பரத்தையின் வீட்டிலிருந்து திரும்பி வந்தபோது உரிமை உணர்வோடு ஊடினாள்; அப்போது நெறிதவறி நடந்த தன் தலைவன் தன் குற்றம் உணர்ந்து திருந்தும் வகையில் அவனைக் கடிந்தாள். அப்போது தோழியிடம் சொல்வது போல் முன்னர் நடந்த பாணன் கதையைச் சொல்லி, ‘தோழி! இன்று நினைத்தாலும் அது சிரிப்பாய் இருக்கிறதல்லவா?’ என்று எடுத்துக் காட்டினாள்; இடித்துரைத்தாள்.

இன்னொரு காட்சி : பரத்தையின் வீட்டில் சில நாள் தங்கிவிட்டுத் தலைவியின்பால் திரும்பிய தலைவன் அவளை நேரே அணுக அஞ்சினான். குற்றமுள்ள நெஞ்சம் அவனைக் குத்திப் புண்படுத்தியது, எனவே அவன் தலைவியின் அன்பிற்கும் மதிப்பிற் கம் உரிய தோழியிடம் சென்றான்; தன் குறை கூறி, நிறை வேண்டினான். ஆயினும், தோழி