பக்கம்:உணர்வின் எல்லை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

உணர்வின் எல்லை

இல்லறத்துக்கு வேண்டுவனவே நினைந்து ஒழுகும் தலைவிக்கே உரித்தாகுக’—

‘பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற்
கழனி யூரன் மார்பு

பழனமா கற்க எனவேட் டோமே.’

இதுவே, புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, ‘இது தகாது’ எனத் தெளிந்த மனத்தனாய், மீண்டும் தலைவியோடு கூடி ஒழுகிய தலைமகன் தோழியோடு சொல்லாடி, ‘யான் அவ்வாறு ஒழுக, நீவிர் நினைத்த திறம் யாது?’ என்றதற்குத் தோழி கூறிய பதில். இச்சொல்லாடலில், ‘பூத்துப் பயன்படாக் கரும்பினையும், காய்த்துப் பயன்படும் நெல்லினையும் உடைய ஊரன்’ என்றமையால், ‘ஈன்று பயன்படாப் பொதுமகளிரையும், குழந்தை பெற்றும் பயன்படும் குலமகளிரையும் ஒரு தன்மையராகக் கருதுபவன் தலைவன்,’ என்ற அவனுடைய குறை சுட்டிக் காட்டப்படும் திறம் பேரின்பம் தருவதாகும்.

எட்டுத் தொகையுள் முதற்கண் வைத்து எண்ணப்படும் ஏற்றம். சான்றது, நல்ல திணையைப் பேசும் நற்றிணை, அந்நூலுள் வரும் ஓர் இனிய காட்சியையும் காண்போம். பரத்தை வீட்டிற்குச் சென்று தங்கியிருந்த தலைவனைத் தலைவி எதிர் கொள்ளாமல் மறுத்து ஊடல் கொண்டாள். ஊடலைத் தணிக்க வகையறியாமலும்—வீட்டினுள் நுழையாமலும்—தலைவன் திகைத்தான். எதிர்பாராமல் விருந்தினர் ஒருவர் வீட்டிற்கு வந்தார். அவர் வரக்-