பக்கம்:உணர்வின் எல்லை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. அன்றாட வாழ்வில் இலக்கியம்

பண்பும் பயனும் நிறைந்தது இலக்கியம்; கலையும் கடமையும் கலந்தது அன்றாட வாழ்க்கை. தனி மனிதன் கலை அறிவிற்கும், கடமை நிலைக்கும் ஏற்ப இவற்றின் தொடர்பு மென்மையுறுதலும், வன்மை பெறுதலும் இயற்கை.

அன்றாட வாழ்க்கையில் இலக்கியம் பயன்பட்டிருக்கும் செய்தியைப் பழந்தமிழ் நூல்களிலும் காணலாம்.

ஆலத்தூர் கிழார் என்ற அருந்தமிழ்ப் புலவர் ஒருவர் ஒரு முறை சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பால் சென்று தம் உள்ளத்தில் நிறைந்து கிடந்த நன்றி உணர்வைப் புலப்படுத்தக் கருதினார்; செய்ந்நன்றி மறத்தலினால் வரும் கேடுகளை நினைவு கூர்ந்து, அத்தகைய கேடான பண்பைத் தாம் மேற்கொள்ள விரும்பவில்லை என்று விளம்ப விழைந்தார். அப்போது அவர்க்குக் செய்ந் நன்றி மறத்தலினால் வரும் ஏதங்கள் பற்றித் தம் முன்னோர் ஓதிச் சென்ற மறை மொழிகள் நினைவிற்கு வரலாயின. அனைத்திற்கும் மணிமுடி கவித்தாற்போல.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள் - 116)