பக்கம்:உணர்வின் எல்லை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்றாட வாழ்வில் இலக்கியம்

147

பன்னிரண்டு ஆண்டுகட்கு முன் சென்னைப் பச்சையப்பர் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராய்ப் புகழுடன் விளங்கிய காலஞ்சென்ற மோசூர் திரு. கந்தசாமி முதலியார் அவர்கள், திரு. ஆ.வி. கன்னைய நாயுடு அவர்கள் கலிங்கத்துப்பரணப் பதிப்பிற்கு (1941) அளித்த மதிப்புரையில் கூறியுள்ள கருத்து வருமாறு.

“களைப்படைந்த போது இந்நூலில் ‘எடுமெடும் எடுமென எடுத்ததோர்’ (404) என்பது முதலிய சில தாழிசைகளை முடுக்காகச் சில நிமிடம் படிப்பேன். அதனால் களைப்புத் தீர்ந்துவிடும்.”

ஒரு பெரும்புலவர் அன்றாட வாழ்க்கையில் இலக்கியத்தால் கண்ட அனுபவப்பயன் இது. இதே கருத்தை மேலை நாட்டு அறிஞர் ஒருவர் வாய்மொழிலும் காணலாம். அவர்தம் கருத்துரையில், ‘இலக்கியம் வாழ்க்கை முழுவதையும் ஆட்கொள்ளும் ஒரு தொழிலாகிவிட்டால், அது ஒரு வேதனைதான், சிற்சில மணி நேரங்களில் அதனிடம் நாம் சரண்புகும் போதுதான் அது நமக்கு மிகுந்த ஆறுதல் இன்பத்தை அளிக்கிறது. என் ஆரம்பகால வாழ்க்கையில் நான் ஒரு பாங்கில் கணக்கனாய் இருந்தேன். அப்போது நான் ஒவ்வொரு நாளும் காலைப்பத்து மணிமுதல் மாலை ஐந்து மணிவரை சாய்ப்பு மேசையிடமே யிருந்து தொல்லைப்பட வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் வீடு திரும்பியதும் மாலை நேரத்தில் எழுத்திலும் படிப்பிலும் என் நேரத்தைச் செல-