பக்கம்:உணர்வின் எல்லை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

உணர்வின் எல்லை

நம் அருமைத் தமிழ் மொழியில் அன்றாட வாழ்க்கைக்காகவே எழுந்த பல நூல்களும் தனிப்பாடல்களும் உண்டு. சிறப்பாக ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் போன்ற நூல்களைக் குறிப்பிடலாம். இனி அன்றாட வாழ்க்கையைப் பற்றிய இலக்கியச் சுவை மிகுந்த பாடல்களைச் சங்க நூல்களிலிருந்து இக்கால நூல்கள் வரை பரக்கக் காணலாம். சங்க நூல் களில் ‘முளிதயிர் பிசைந்த’ என்ற குறுந்தொகைப் பாட்டை நல்ல சான்றாகக் காட்டலாம். அடுத்து வரும் அன்றாட வாழ்வில் அல்லது வாழ்க்கையில் எழுந்த இலக்கியங்கட்குக் கவிதைச் சுவை ததும்பும் கணக்கற்ற நாடோடிப் பாடல்களைச் சான்றாகக் காட்டலாம். அவற்றின் வகையும் தொகையும் கணக்கில் அடங்கா. ‘ஏத்தப் பாட்டிற்கு எதிர்ப்பாட்டில்லை’ என்று கம்பரையும் மெய்ம்மறக்கச் செய்த பாடல்கள் அவை. பாட்டாளி வர்க்கம் படைத்த-கம்பரை மெய்சிலிர்க்க வைத்த இப்பாட்டின்பத்தையே மகா கவி பாரதியாரும்.

மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியினும்
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங்
கோற்றொதடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணமிடிப் பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்,
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்,
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்
நெஞ்சைப் பறிகொடுத்தேன்’

(குயில் பாட்டு)

என்று போற்றிப் பாடுகின்றார்.