பக்கம்:உணர்வின் எல்லை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்றாட வாழ்வில் இலக்கியம்

153

இனி இறுதியாக நாம் ஆழ்ந்து உள்ளுவதற்கு உரியது ஒன்று உண்டு. அது இன்றைய சமுதாயத்தின் அன்றாட வாழ்க்கையில் இலக்கியம் செலுத்தி வரும் செல்வாக்கைப் பற்றியது. இக்காலத்தில் ‘ஒரு பகல் வாழ்க்கை’ உடைய புற்றீசல்கள் போலப் புறப்பட்டு வரும் சிறு கதைகட்கும், கட்டுரைகட்கும், வருணனைகட்கும், கலைப்படைப்புக்கும் அளவில்லை. அவற்சல் மக்கள் வாழ்விற்கு நன்மையைவிடத் தீமையே அதிகம்போலத் தோன்றுகிறது. இதற்குப் பொறுப்புடையார் யாராயினும், அவர்கள் மனச்சான்றைக் கொன்று விடாமல், மேலை நாட்டுப் பேரறிஞர் ஒருவர் கூறிப்போந்த உண்மையை ஊன்றிச் சிந்திப்பார்களாக :

‘ஒரு துளி நஞ்சு ஒரு முறைதான் தீங்கிழைக்கும்; ஆனால் தீய நூல் ஒன்று எக்காலத்திற்கும் மக்கள் மனத்தை நச்சுக்களமாக்கும்,[1] என்பதே அவ்வறிஞர் பொன்மொழி.

தீய இலக்கியங்கள் வளர்வதற்கான அரசியல் பொருளாதார சமூகக் காரணங்கள் பலப் பல. அவற்றை நாம் இங்கே விரிவாக ஆராய வேண்டுவதில்லை. காரணம் எதுவாயினும், தீமை தீமைதான். எனவே, தீய இலக்கியங்கள் தொலைந்து நாட்டில் பல்வேறு வடிவங்களிலும் தூய தீஞ்சுவை இலக்கியங்கள் பரவவேண்டும். சிறப்பாகத் தொன்மை


  1. A dose of poison can do its work only once. but a bad work can go on poisoning people's minds for any length of time.—John Murray