பக்கம்:உணர்வின் எல்லை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. இலக்கியத்தில் குழந்தை

இன்பத் தமிழினும் இனிய மொழி தமிழனுக்கு இல்லை; அன்புக் குழந்தையினுள் சிறந்த செல்வம் மனிதனுக்கு இல்லை. தமிழும் தெய்வமும் ஒன்று; குழந்தையும் தெய்வமும் ஒன்று. குழந்தையின் வாழ்வில் பல பருவங்கள் உண்டு; இலக்கிய வரலாற்றிலும் நிலைகள் பல உண்டு.

தமிழிலக்கியத்தை அணி செய்யும் தனிச்சிறப்பு வாய்ந்த நூல்களை ஐந்தாகப் பாகுபடுத்தலாம். அவை சங்க நூல்கள், பக்திப் பாசுரங்கள், பெருங்காவியங்கள், சிற்றிலக்கியங்கள், புதுமை இலக்கியங்கள் ஆகும். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண்கீழ்க் கணக்கும் சங்க நூல்கள் என்றும், தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் முதலியன பக்திப் பாசுரங்கள் என்றும், சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி பெரிய புராணம் கம்பராமாயணம் கந்த புராணம் முதலியவை பெரும் காப்பியங்கள் என்றும், தூது உலா பரணி முதலிய தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கள் சிற்றிலக்கியங்கள் என்றும், 19, 20 ஆம் நூற்றாண்டு இலக்கியங்கள் புதுமை இலக்கியங்கள் என்றும் போற்றுவர் தமிழ் அறிஞர். ‘இலக்கியத்தில் குழந்தை’ பற்றிய இக்கட்டுரையில், இவ் ஐவகை இலக்கியங்களும் ‘பேசும் பொற்சித்திரங்கள்’ பற்றிக்கூறும் சொற் சித்திரங்களைக் காண்போம்.