பக்கம்:உணர்வின் எல்லை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் குழந்தை

159

3

‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்’ தமிழில் தோன்றிய தலைக்காப்பியம்; தனிப்பெருங் கலைக் காப்பியம். அதன் அடிச் சுவடுகளைப் பின்பற்றி எழுந்த அமரகாவியங்கள் பலப் பல. அவற்றுள் எல்லாம் பெரும்புகழ் வாய்ந்த பெருங்காவியம் கல்வியிற் சிறந்த கவிச் சக்கரவர்த்தி பாடிய இராம காதையே. பல்சுவையும் மலிந்த அப் பெருங்காப்பியத்தில் தலைசிறந்து விளங்கும் படலம் ‘நாட்டுப் படலம்’, கம்பனின் கனவுலகக் காட்சியாய் விளங்கும் அப்படலத்தில், சேய்களைப் பற்றியும் அச்சேய்கட்குப் பாலூட்டும் தாய்க்குலம் பற்றியும் அழகியதொரு வருணனை அமைந்துள்ளது.

குழந்தைகட்கு எவ்வித நோயும் நொடியும் அணுகாமல் இருக்கும் பொருட்டுக் காத்தற் கடவுளான திருமாலின் சங்கம், சக்கரம், தண்டு, வில், வாள் என்னும் பஞ்சாயுதங்களையும் வடிவமாக அமைத்து, குழந்தைகட்கு அணிவிப்பது, அருள் நெஞ்சம் படைத்த அன்னையர் பண்பு. அப் பண்பு வழி குழந்தைகட்கு ஐந்தாவது மாதத்தில் அணிவிக்கப் பெற்ற, ‘ஐம்படைத்தாலியை அணிந்துள்ள குழந்தைகட்கு அன்னையர் பால் புகட்டுகின்றனராம். அக் குழந்தைகளின் வாயில் ஒழுங்காகச் சொள்ளு நீர்—இல்லை, இல்லை; அமிழ்தம்—ஒழுகுகின்றதாம்! அச்செவ்வாய்க் குதலையர்க்குச் செந்தாமரைபோற் குவிந்த கையால் பால்புகட்டுகின்றனராம்! பாவைமார் கரம் குவித்துக் குழந்தைகளின் பவள வாயில்