பக்கம்:உணர்வின் எல்லை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

உணர்வின் எல்லை

வன் படையோ சோழநாட்டின் எல்லையை இகந்து பாண்டி நாட்டுள்ளும் பாய்ந்தது. அஞ்சினான் மீனவன், விற்கொடியான் துணை வேட்டான். அவனும் துணையாகப் படை திரட்டிக் களம் புகுந்தான். இருபடையும் ஒரு படையாய் நலங்கிள்ளியின் சேனையைத் தாக்கின. ஆயினும் கலங்குவானோ காவிரிப் புதல்வன்? அரிமா என் ஆர்த்துக் கடும்போர் உடற்றினான்; நலங்கிள்ளியின் சினத் தீ கண்ட சோழப் படை, கொடுவரிப் புலியின் கூட்டமென ஒன்னார் படையைக் களத்திடை உழக்கியது. கடலொடு கடல் கலக்கியது போல், வரையொடுவரை தாக்கியது போல், முகிலொடு முகில் மோதியது போல் படையோடு படை சாடியது. இருதரப்பிலும் கடும் போர் நிகழ்ந்தது. குருதி வெள்ளம் கானாற்று வெள்ளமாய்ப் பெருகிற்று. பிண மலைகள் குவிந்தன; ஆயிரம் ஆயிரம் அமாஞ்சா வீரர்கள் வாயிலும் வயிற்றிலும் நெற்றியிலும் நெஞ்சிலும் விழுப்புண் தாங்கிச் சாய்ந்தனர்; களிறும், புரவியும், தேரும் கணக்கின்றி நாசமாயின. இறுதியில் பாண்டியன் படை, சேரன் தானை நெஞ்சொடிந்து நிலை கெட்டு வலியழிந்து நாற்றிசையிலும் சிதறி ஓடின. மண்ணதிர— விண்ணதிர—மாற்றார் மனம் அதிர வீர முரசு கொட்டி நலங்கிள்ளியின் படைகள் மேலும் மேலும் முன்னேறின. பாண்டி நாட்டின் பகுதியாகிய கோனாட்டையும் கடந்தன. இந்தாள். சிவகங்கைக்கு அருகிலுள்ள ‘எழுபொன் கோட்டை’ என்ற ஊரே அந்நாள், ‘ஏழெயில்’ என்னும் பேரோடு விளங்கியது. நலங்கிள்ளியின் நிகரில்லாப் படைவலிக்கு ஆற்றாது