பக்கம்:உணர்வின் எல்லை.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

உணர்வின் எல்லை

என்பது அவர் அருமையான பாடல். சேரிப்பள்ளர் ‘மழைக்குறி’ கண்டு ஆடிப்பாடியது முக்கூடற் பள்ளில்; சேரிப்பள்ளர் ‘சுதந்திரக்குறி’ கண்டு ஆடிப் பாடியது பாரதி பாட்டில். பள்ளர்--பதினேழாம் நூற்றாண்டு உழவர்—தோற்றுவித்த இலக்கியம், இயற்கை அழகையும், இறைவழிபாட்டு உணர்வையும் ஊட்டுவது; அடிமைத்தளை முறித்து விடுதலை காண விழைந்த பள்ளர்—இருபதாம் நூற்றாண்டு உழவர்—தோற்றுவித்த இலக்கியம் சுதந்திர வெறியைச் சமதர்ம ஆவேசத்தை மூட்டுவது. சேரிப்பள்ளர் களியாட்டமாகப் பாரதியார் பாடிய சுதந்திரப் பள்ளு, இன்று செந்தமிழ் நாடு முழுவதும் ஒலிக்கிறது.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்—வீணில்
     உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம்—வெறும்
     வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்.
நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்—இது
     நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்—இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பரி

     பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.

என்ற கவியரசர் பாடல்கள், இருபதாம் நூற்றாண்டு உழவர் இலக்கியமாய் மட்டுமன்று—மனித குலத்தின் உரிமைச் சாசனமாயும் காட்சியளிக்கின்றன.