பக்கம்:உணர்வின் எல்லை.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

உணர்வின் எல்லை


அந்த இழிவுதீரும் வழியையும் கூறும் வள்ளுவர், ஒரு குறளில் 'புறங் கூறித் திரிவோரையும் பூமி சுமக்கின்றதே' என்று வியக்கின்றார். பொறையின் பெருமையை ஓதிய-பூமியிலும் பொறையுடையாள் வேறில்லை என்பதை உணர்ந்த-திருவள்ளுவர் நிலமகளின் கருனை நெஞ்சை -அறவுணர்வை நினைக்கின்றார்; அகழ்வாரைத் தாங்கும் அந்த அன்னையின் அறவுள்ளமே, ஒருவரைப்பற்றி அவரில்லாதபோது பிறரிடம் குறை பேசித் திரியும் சிறியோர்களைத் தாங்கும் கருணைப் பண்பிற்குக் காரணம் என்று கருதுகிறார். கருதி, அக்கருத்தினை வெளியிடும் குறள் இது:

'அறன் நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை'
(189)

(ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, 'இவனையும் சுமப்பதே எனக்கு அறம்' எனக் கருதி நிலம் சுமக்கின்றதோ?- டாக்டர். மு.வ.)

புகழோடு வாழ்வதே வாழ்வு. அந்த வாழ்வு பெறாதார் வாழ்க்கை பூமிக்குப்பாரம். இந்தக் கருத்தைப் 'புகழ்' என்னும் அதிகாரத்தில் வலியுறுத்திப் பேசுகின்றார் வள்ளுவர். தகுதி வாய்ந்த செயல்களைச் செய்து புகழ் எய்தாதார் உடலைச் சுமப்பதால் நிலத்தின் வளம் குன்றிவிடுமோ என்று கவல்கின்றார் வள்ளுவர்.

'வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.'
(239)