பக்கம்:உணர்வின் எல்லை.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

உணர்வின் எல்லை


வாழ்க்கையை அழகு செய்யும் சிறந்த பண்புகளுள் ஒன்று கண்ணோட்டம். அளவோடும் கடமைக்கு ஊறில்லா வகையிலும், வாழ்க்கைக்குத் தேவையாகும் அந்த அழகிய நாகரிகப் பண்பாகிய தயவால்தான்-கண்ணோட்டத்தால்தான் - உலகியல் நடைபெறுகின்றது. எனவே அத்தகைய கண்ணோட்டம் இல்லாதார் பூமிக்குப் பாரம்தான்-உண்மையிலேயே பெரும் பாரம்தான். இதனை,

‘கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.’
(572)

என்னும் குறளால் அறிகின்றாேம்.

(கண்ணோட்டத்தில் உலகியல் நடைபெறுகின்றது; கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை. —டாக்டர் மு. வ.) -

பூதம் காப்பதுபோல் பொருளைப் பாதுகாத்து யாருக்கும் பயன்படாத வகையில் இறுகப் பிடித்து இருத்தல் அறிவற்ற—அறமற்ற—செயல். ஆனால், உலகில் சிலர் காசை எண்ணிப்பார்ப்பதிலேயே விருப்பம் கொள்கின்றனர். அந்தக் காசை அறமான வழிகளில் செலவு செய்து புகழ் கொள்ளும் நெறியில் அவர்கட்கு ஆசை பிறப்பதில்லை. அத்தகையோர் இந்த உலகில் பிறந்து வாழ்தல் பூமிக்குப் பாரந்தான் என்று திருவள்ளுவர் கூறுதலைக் கீழ்வரும் குறளால் அறியலாம்:

‘ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை’
(1003)