பக்கம்:உணர்வின் எல்லை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆருயிர் மருந்து

19

குமுறும்! கண்களில் நீர் கலங்கும்! அதனாலன்றோ, கலைஞர்கள் அதை, ‘தீ’ என்றும், ‘பிணி’ என்றும், ‘பாவி’ என்றும் எண்ணிக் கலங்கினார்கள்? அதனாலன்றோ சான்றோர்கள், ‘அழிபசி,’ ‘காய்பசி,’ ‘கொடும்பசி’ என்று மனம் நொந்து கூறினார்கள்.

இப்பசியின் கொடுமைக்கு இரையான தனி மனிதனுக்கு ஆறுதல் அளிப்பது, காலனது பாசம் ஒன்றுதான், இவன் உடலை நாயும் நரியும், கழுகும் பருந்தும் கவ்வியும் கொத்தியும் தின்னும், இவன் உள்ளத்தையோ, கொலையும் களவும், பகையும் பொறாமையும் பிடுங்கித் தின்னும். தன் மனிதனுக்கு ஏற்படும் இந்நிலை ஒரு சமுதாயத்திற்கே ஏற்பட்டால், கொடுமை அதனினும் வேறில்லை. அக்கொடுமைக்கு ஆளான நாடு, செம்மையெல்லாம் பாழாகிவிட்ட சுடுகாடாகவே இருக்கும். அங்கு அழுகிய பிணங்களின் நாற்றம் மட்டும் அன்றி, அழுகிய மனங்களின் நாற்றமும் வீசும்.

இப்பேரழிவை நினைந்து நினைந்து குமுறிக் குமுறி அயர்வுற்ற சாத்தனாரின் இதயத்திலிருந்து பிறந்த காவியமே ‘மணிமேகலை.’ ‘பசிப்பிணியென்னும் பாவி’க்கு இரையான தனியொருவன் தன் மனிதப் பண்பெல்லாம் இழந்து பாழாகும் நிலையை தெஞ்சுருக எடுத்துக்காட்டும் சாத்தனார், அக்கொடுமைக்கு இரையான ஒரு சமுதாயத்தில், ‘இதைவிடக் கொடுமை இனி இல்லை,’ என்று நினைக்கிச் செய்யும் மிகக் கொடிய காட்சியொன்றையும் சுட்டிக் காட்டுகிறார்.