பக்கம்:உணர்வின் எல்லை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

உணர்வின் எல்லை

அந்த இளம்பெண் யார்? குறி சொல்லும் அந்தக் கிழவியை, அவள் எதற்காக, எங்கே அழைத்துச் செல்கின்றாள்?

***

ஒரு சிறு வீடு; அதில் ஒரு பழந்தமிழ்க் குடும்பம்; மூன்று பேர் வீட்டுவாயிலில் உட்கார்ந்திருக்கின்றனர்; ஒருவர் முகத்திலாவது மகிழ்ச்சி தோன்றவில்லை.

அதோ இருக்கின்றாளே வயதாலும் கவலையாலும் வாடிய முகத்தினள், அவளே நற்றாய்.

அவளருகே இருப்பவளே தலைவி. கருவண்டு போன்ற நீண்ட கரிய விழிகள், ‘குறு குறு’ என்ற பார்வை, செந்தாமரை போன்ற முகம், மாந்தளிர் போன்ற மேனி, பட்டுப் போன்ற மட்டமர் கூந்தல் —இவ்வளவும் இருந்தென்ன? தாமரை போன்ற அவள் முகத்தில் ‘ஒளி’ இல்லை ; பவளம் போன்ற அவள் இதழ்களில் ‘நகை’ இல்லை; தன்னை அறியாமல் தன் கடைக்கண்களில் வழிந்து வரும் கண்ணீரை யாருக்கும் தெரியாவண்ணம் தன் சுண்டு விரலால் மெதுவாகத் துடைத்துக்கொள்கிறாள்; அவள் மனத்தை அவளாலேயே அடக்க இயலவில்லை; அவள் கண்களே அவளுக்குப் பகையாய் உள்ளன; அவள் காதல் உள்ளத்தின் உணர்வே அவளுக்கு நோயாய் இருக்கிறது.