பக்கம்:உணர்வின் எல்லை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘பாடுக பாட்டே!’

29

அவளையே பார்க்கின்றனர்; குறி சொல்லும் கிழவியை அன்போடு அழைக்கின்றாள் தோழி:-

‘அகவன் மகளே! அகவன் மகளே!’

எத்தகைய அகவன் மகளாம்?

‘மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே!’

எதற்காக இப்படி அழைக்கின்றாள்? என்ன செய்ய வேண்டுமாம்? தோழி வேண்டுகிறாள் :

‘............பாடுக பாட்டே ! இன்னும் பாடுக பாட்டே !’

எந்தப் பாட்டை?

தன் சுட்டு விரலை உயர்த்திச் சொல்லுகின்றாள் தோழி :—

‘......... அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!’

அவர் நன்னெடுங் குன்றமா! யார் அவர்!

தலைவியின் நுதல் வியர்க்கின்றது. முகம் நாணத்தால் விளக்கின்றது. நற்றாயின் கண்கள் வியப்பால் விரிகின்றன; செவிலித்தாய் ஆறுதலோடு பெருமூச்சு விடுகின்றாள் ; தோழி புன்முறுவலோடு தலைவியின் மலர்க்கரங்களைத் தடவுகின்றாள். நம் தமிழ் நாவும்,