பக்கம்:உணர்வின் எல்லை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

உணர்வின் எல்லை

என்பது உடலின் சேர்க்கை அன்று, உள்ளத்தின் பிணைப்பும் அன்று; உயிரின் கலப்பு. அரசன்—ஆண்டி, புரவலன்—புலவன் என்ற வேறுபாடுகளைவென்று விளங்குவது நட்பு; உயர்ந்தவன்—தாழ்ந்தவன், ஆண்—பெண் என்ற தடைகளை மீறித்திகழ்வது நட்பு; சுருங்கச் சொன்னால், ‘தனி இருவர் என்ற நிலைமாறி, ‘ஒருவர்’ என்ற தத்துவ உணர்வோடு வாழ்க்கையில் வாழ்வதுதான் நட்பு’, என்று சொல்லலாம். அத்தகைய உணர்வு பெற்றவரே ஔவையார். அதிகமான் அவரிடம் வைத்திருந்த அன்பிற்கும் மதிப்பிற்கும் எல்லையும் உண்டோ? உண்டவரைச் சாவாதிருக்கச் செய்யும் நெல்லிக்கனி தனக்குக் கிடைத்தபோது அதை ஔவையாருக்கு அளித்து, அவர் சாவாதிருக்க விரும்பிய வள்ளலல்லனோ அதிகமான்? அக்கனியை உண்டபின் உண்மையை உணர்ந்து உள்ளம் உருகி,

‘நீல மணி மிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும!’

என்று இலக்கியம் உள்ளவரை அதிகமான் புகழ் அழியாதிருக்கச் செய்த தமிழ் மூதாட்டியார் அல்லரோ ஔவையார்?

ஆம்! அந்த அதிகமான் போர்க்களத்தில் இறந்துவிட்டான்; எதிரி எறிந்த வேலால் இதயம் பிளந்து மாண்டுவிட்டான். அந்த வேல் அதிகமான் இதயத்தைப் பிளந்த அக்கணமே ஒளவையார் இதயத்தையும் பிளந்துவிட்டது. அவர் என்ன