பக்கம்:உணர்வின் எல்லை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லவள்

37

திடீர் திடீர் எனக் குரைக்கும் ஒலி அவ்வப்போது கேட்கிறது. அதனால் தனிமையில் இருப்போர் அச்சம் மிகுகிறதேயன்றிச் சிறிதும் குறைவதாய் இல்லை.

இத்தகைய இருள் செறிந்த-அமைதி நிறைந்த கங்குல் வேளையில்—அதோ! ஈருருவங்கள்! யார் அவர்கள்? கொடி படர்ந்த மரம் போன்றே அவளும் அவனும் நிற்கிறார்களே! நீலவானத்து வெண்மீன்கள் யாவும் ஏன் அத்துணை நாணம் கொண்டு அவர்களைக் காணவும் கண் கூசுவனபோல இமைக்கின்றன! மெல்லெனப் பேசும் அவர்களது தமிழ்ப்பேச்சிற்கு இடையூறு செய்ய இசையாதனவாய், பற்றற்ற ஞானிகளின் மனம் போல் அசைவின்றி நிற்கின்றனவே, அம்மரஞ் செடி கொடிகள் எல்லாம்! மரந்தோறும் சிறு சிறு ஒலி செய்த பறவைகளின் ஒலி எல்லாம் அடங்கி விட்டதே! யாருக்காக இயற்கை அன்னை இவ்வளவு பரிவு காட்டுகிறாள்? வேறு யாருக்காக இருக்கமுடியும்? அந்தச் சங்க காலக் காதலர்கட்காகத்தான்! ‘குறுந்தொகை’ போற்றும் தலைவன் தலைவியர்க்காகத்தான்! ‘அன்பே உயிர்; அறமே மூச்சு!’ என வாழும் அச் செந்தமிழ்ச் செல்வர்கட்காகத்தான்.

இயற்கை நெறிவழி வாழ்ந்த மக்கள் சங்க காலத் தமிழ்மக்கள். அறம் பொருள் இன்பம் வீடு எல்லாவற்றையும் ‘இயற்கை’ வாயிலாகவே கண்ட பெருமக்கள் அவர்கள். அவர்கள் வாழ்வின் குறிக் கோள் அன்பு—அன்பு—அன்பு என்ற ஒன்றே