பக்கம்:உணர்வின் எல்லை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லவள்

41

போல் வாழ்வு’ம் அமைதல் கண்டான் ; எல்லையில்லா மகிழ்வு கொண்டான். ஆனால், உண்ணும் உணவிலோ-விருந்திலோ-அவன் உள்ளம் அமைதி காண இயலுமா? வண்டுபோல அவன் விழிகள் வட்டமிட்டன. ஆ! அதோ அவன் தேடிய செல்வம் ! என்னே அவன் மகிழ்ச்சி! கண்கொட்டாது பார்க்கலானான், தன் கண்ணின் கருவிழி போன்றாளை. ஆனால், அவளோ ..........?

தலைவன் உள்ளம் சிந்தனைக் களமாயிற்று.

‘யார் அது? அவள் தானே?’

‘ஆம்! அவளேதான் ! உன் ஆருயிரேதான்!’

‘அவளேயோ? அதோ அவள் தன் கூந்தலினின்றும் உதிர்க்கும் அம்மலர்கள்..........?’

‘ஆம்! நேற்றுக் கங்குலில் அவள் கதுப்பெல்லாம் சிவந்து களிவெறி கொள்ள நீ சூட்டிய நறுமலர்களே! ’

‘என்ன வியப்பு ! ஒன்றும் தெரியாதவள் போன்று இருக்கிறாளே!’

‘நடிப்பு!’

நடிப்பா! நடிக்கவும் முடியுமோ? என்னைப் பார்க்கவும் அவள் விழிகள் துடியாவோ? நான் சூட்டிய மலர்களை எல்லாம் கீழே உதிர்க்கிறாளே!