பக்கம்:உணர்வின் எல்லை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. என்ன வீரம்!

இரவு மணி எட்டு இருக்கும். குளிர் காற்று ‘சிவுக்குச் சிவுக்கு’ என்று ஊசியாற் குத்துவது போல வீசிக்கொண்டிருந்தது. அந்நிலையில் இயற் கையின் சாதாரணச் செயல்களுக்குக்கூட அஞ்சி வாழும் ‘நவநாகரிக’ மனிதக் கூட்டத்தைச் சேர்ந்த நான் மட்டும் வாளாவிருக்க முடியுமா? தகுந்த தற்காப்புக்களோடு காலுறையும் கம்பளிக் கோட்டும் அணிந்துகொண்டு மேஜைமீதிருந்த ‘சங்க இலக்கிய’ப் புத்தகத்திலிருந்து ஒரு பாட்டைப் பன்முறை மிகவும் சுவைத்துப் பாடிக்கொண்டிருந்தேன்.

திடீரென்று யாரோ பின்புறமாக வந்து என் கண்களைப் பொத்துவதைக் கண்டேன். ‘யாரது?’ என்றேன். பேச்சில்லை. ‘யாரப்பா அது?’ என்றேன், சற்று அழுத்தமான குரலில்; பதிலில்லை. எனக்குக் கோபமே வந்துவிட்டது. ‘அடே யாரப்பா அது?’ என்றேன் பொறுமை இழந்த குரலில்.

என் கண்களை மறைத்திருந்த கைகள் நழுவின; திரும்பினேன். சிரித்துக்கொண்டே நின்றான் சொக்கலிங்கம். ‘அட, சொக்கலிங்கம், நீயா! நீ எப்பொழுது வந்தாய்? கடிதம் போட்டிருக்கக்கூடாதா? இரயிலடிக்கே வந்திருப்பேனே?’ என்று மூச்சு விடாமல் வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போனேன்.