பக்கம்:உணர்வின் எல்லை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ன வீரம் !

53


கொண்டான். அவன் உழைப்பு, ஒன் று க் கு நூறாகப் பலன் தந்தது. வேலி ஆயிரம் விளைந்தது கண்டு அவன் மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தது. தன் நிலத்தின் வளமையை-தண்ணார் தமிழகத்து ஆறுகளின் கருணையை--எண்ணி எண்ணிக் களிப்படைந்தான்; அக்களி வெறியில் தன்னை மறந்து கலையின் முழக்கத்துக்கும், கூத்தின் இன்பத்திற்கும் தன்னைக் காணிக்கையாக்கினான்; கற்பின் கொழுந்தாம் தன் பொற்புடை மனைவியை மறந்தான்; அவள் அறிவு பேதுற, கண்கள் கலங்க, புதுமை இன்பத்தில் தோய்ந்தான்; புது மலரின் பெருநறவில் வீழ்ந்த வண்டுபோலப் பரத்தையின் வீட்டில், இன்பத்தில் மயங்கிக் கிடந்தான் !

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் அவன் இல்லக்கிழத்தி; ஒரு நாள் தன் பொறுமையை இழந்தாள்; தன் தலைவனை இசையாலும், கூத்தாலும் மயக்கி வைத்திருக்கும் பரத்தை அறியுமாறு சில சொல் கூறினாள்: 'ஆண்கள்தான் இப்படி என்றால், இந்தப் பெண்களுக்குத்தான் அறிவில்லையா? தன்னைப் போல் ஒருபெண் துயருற, தான் மட்டும் வாழ நினைக்கும் நெஞ்சமோ கலை நெஞ்சம்? கற்பற்ற வாழ்க்கை வாழ்வார் நெஞ்சம் கல் நெஞ்சங்தான். அந்நெஞ்சில் பிறக்கும் கலையும் ஒரு கலையோ!’ என்ற சொற்கள் அவள் உள்ளத்து உணர்ச்சியை வெளிப்படுத்தின. தலைவி கூறிய இச் சொற்கள், காற்றெனும் தேவனினும் பெருவலி படைத்த