பக்கம்:உணர்வின் எல்லை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருத்தமான உவமை

69


சிந்தனை சுடர்விட்டு எரிய ஆரம்பித்தது. 'திருமணத்தை இடையே வைத்து விட்டுக் கடமை உணர்ச்சியால் பொருள் ஈட்டுவதற்குப் பிரிந்து செல்லும் தலைவனுக்கு யாது கூறலாம்' என ஆழ்ந்து எண்ணினாள். 'ஆம். தலைவன் நல்லவனே; நன்றி உணர்ச்சிமிக்கவனே. ஆனால், இந்த உலகம் பரந்த உலகம். காலம் மிக ஆற்றல் வாய்ந்தது. மனமோ மிகப் பொல்லாதது என்று கூறுகிறார்கள். எனவே, எதை மறந்தாலும், பிரிந்து செல்லும் தலைவன் எப்போதும் மறக்க முடியாதவாறு அவன் உள்ளத்தில் ஆழ்ந்து சென்று தங்குமாறு ஒர் அறிவுரை கூற வேண்டும்,' என்று துடித்தது அவள் நெஞ்சம்.

அவள் இதயத்துடிப்பு அறிவும் அனுபவமும் நிறைந்த தமிழ்ச் சொற்களாக வடிவம் பெற்றது. 'தலைவரே, யானைக்கன்று தனது பால் நிறைந்த மடியில் பால் குடித்துக்கொண்டு நிற்கும்போதே தினையை உண்ணும் பெண் யானைகளைப் படைத்த பெரிய மலைகளையுடைய நாட்டிற்கு உரியவரே, வறுமையும் துன்பமும் அடைந்து கெட்டுப்போன காலத்தில் பிறரால் பெற்று மகிழ்ந்த உதவியை, அரசு கட்டிலாகிய பெருஞ்சிறப்பை அடைந்த பின் மறந்துவிட்ட அரசனைப்போல, நீவிர் நாங்கள் காட்டிய அன்பு, செய்த நன்றி-எல்லாம் மறந்து விடாமல் எங்கள் அருமைத் தலைவியையே திரும்பி வரும்வரை நினைவில் போற்றி, வந்தபின் திருமணம் புரிந்துகொள்ள வேண்டும் ; அவ்வாறு நாங்கள்