பக்கம்:உணர்வின் எல்லை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாடகக்கலை

91

தமிழ் நாடகக்கலை புதுவாழ்வு பெற்றது, பிற்காலச் சோழர்கள் காலத்திலேதான். தஞ்சைப் பெரிய கோயிலின் வடக்குப் பிராகாரத்திலுள்ள சோழப் பெருவேந்தனாகிய ராஜேந்திரன் காலத்துக் கல்வெட்டொன்று, அவன் காலத்தில் ஆடப்பட்ட ராஜராஜேஸ்வர நாடகம் பற்றியும், நாடகத்தை ஆடிய, ‘திருவாளன் திருமுது குன்றனான விஜயராஜேந்திர ஆசாரியான் உடையா’ருக்கும், அவர் மரபினருக்கும் விடப்பட்ட மானியங்கள் பற்றியும் அழகாகக் குறிப்பிடுகின்றது. ஆயினும், இந்த நாடகம் பற்றிய விவரம் ஒன்றும் நமக்குத் தெரியவில்லை. சிறந்த நாடகக்கலை ஓங்கி வளர்ந்த தஞ்சையில், சில காலத்திற்கு முன்பு வரை சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய ‘சரபேந்திர பூபாலக் குறவஞ்சி’ என்ற நாடகம் ஆடப்பட்டது. தஞ்சைப் பெரியகோயிலில் உள்ளதுபோலவே, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருவல்லீஸ்வரம் கோயிலில் இருக்கும் கல்வெட்டு ஒன்றும், உய்யவந்தாள் அழகிய யசோதை என்னும் தாசிக்கு நாடகமாடும்பொருட்டுக் கொடுக்கப்பட்ட மானியங்களைப்பற்றிப் பேசுகிறது.

17ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னும் எழுந்த தமிழ் நாடகங்கள் பற்றிய குறிப்புக்கள் பல, அறிஞர்களின் ஆராய்ச்சியின் பயனாக வெளிப்பட்டுள்ளன. ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகட்கு முன் திருக்கச்சூர் நொண்டி நாடகம், பழனி, நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம் போன்ற ஒருவகை நொண்டி நாடகங்கள் எழுந்தன. தீயொழுக்கத்தில் ஈடுபட்ட ஒருவன் தன் அங்கங்களை இழந்து நொண்டியாகிப்-