பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ix

அமைந்திருப்பதாகச் சொன்னார்கள். தொகுதியிலேயே நீளமான கட்டுரை. பெர்னாட்ஷா, கட்டுரையின் நீளத்தை நான் ஒப்புக்கொள்வதோ ஒரு தப்பு, பலவீனம் என்று உறுமுவது என் உட்செவியில் கேட்கிறது. நானும் மன்னிப்புக் கேட்கவில்லை. சொல்லோடு என் அனுபவம், எழுத்தாளர்களுக்கு, ஏன் வாசகர்களுக்கும்தான் பயன்படக்கூடும் என்கிற எண்ணம்தான்.

இப்போது ‘இன்னொன்றும் புலப்பட்டது. புத்தகத்தின் பிற்பகுதியில் ‘The spirit of man’ என்கிற ப்ரயோகம், சற்றுக் கூடுதலாவே அடிபடுகிறது போல எனக்குத் தோன்றுகிறது. இதை நேர்த்தமிழ்ப்படுத்தும் என் முயற்சியில் ‘ஆத்மாவின் உத்வேகம், தேடல் துடிப்பு’ ‘மொழி பெயர்ப்பு ஈடு கொடுக்கிறதா? ஊஹும். திருப்தியில்லை. ஆத்மா என்பது Spirit ஆவது’ மனித ஆவேசம்? இன்னும் சற்று நெருக்கமாகப் பொருந்தலாம்? ஆனால் நம் பண்பாட்டு முறையில் பழக்கமுறையில், பாரம்பரிய முறையில் ஆத்மாவுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்கிற சித்தத்தில் அதன்மேலேயே எல்லா சுமைகளையும் ஏற்றிவிடுகிறோம். அந்த முறையில், உத்வேகத்துடன், தேடல் துடிப்புடன், ஆத்மாவின் கர்வத்தையும் சேர்த்துக்கொள்கிறேன். சரி, ஆத்மாவுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்பதால், என்னுடைய கர்வமாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே!

ஆகவே, The spirit of man, இந்தத் தொகுப்பின், ஏன் பூரா என் எழுத்தின் உள்சரடாக, உயிர் நாடியாக, ஜபமணியாகத் திகழ்வது தெரிகிறேன்.