பக்கம்:உத்தரகாண்டம்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

இளைஞர் பலர் செயல் படத் தொடங்கியுள்ளனர். புலம் பெயர்ந்து அந்நாட்களில் கூலித் தொழில் செய்து சிறுமைப் படச் சென்ற தலைமுறையில் இருந்து, இந்நாள் புலம் பெயர்ந்து சென்றிருக்கும் இளைஞர் வேறுபட்டவர்கள். இந்நாட்களில் தலையெடுத்து நிமிரும் இளைஞர் நம்பிக்கைக்குகந்தவர்களாய், புதிய புதிய துறைகளில் சாதனைகள் செய்பவர்களாய்த் திகழ்கிறார்கள். அவர்கள் தம் வேர்களைக் கண்டறிந்து, புதிய ஆற்றலுடன், பாரதத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வார்கள்.

மகாபாரதமும், இராமாயணமும், பாரதத்தின் பெருமை சொல்லும் இதிகாசங்கள். நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம் இவ்வுலகில் இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அழிவு, உயிர்ப்பு இரண்டையும் மாறி மாறிக் காட்டும் காலத்துக்கு முடிவோ எல்லையோ இல்லை.

இராமாயணம், இராமனின் முடிசூடுதலுடன் முடிந்து விடுவதில்லை. அதேபோல் குருட்சேத்திரப் போருடன் மகாபாரதம் நிறைவு பெற்றுவிடவில்லை. சீதை வனவாசம் தொடருகிறது; யாதவர்களின் அழிவும் நிகழ்கிறது. நம் சுதந்தரப் போராட்டமும் ஒரு காப்பியம் போன்றதுதான். அரசியல் விடுதலையைத் தொடர்ந்து இந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சரிவுகளும் மோதல்களும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காரிருள் கவியும் போதே, விடிவெள்ளி தோன்றும் என்பது நிச்சயமாகிறது. உறைபனியில் கருகும் பசுமைகள் மீண்டும் உயிர்க்கின்றன. எனவே ‘உத்தரகாண்டம்’ என்ற தலைப்பிட்ட இந்தப் புதினத்திலும் அந்த நம்பிக்கை விடி வெள்ளிகளைக் காட்டியிருக்கிறேன். இந்தப் புனைகதை, சற்றே வித்தியாசமாக, முன்னும் பின்னுமாகப் புனையப்பட்டிருந்தாலும், என் சிறுமிப் பருவத்திலிருந்து இந்நாள் வரையிலும் நான் கண்டு பேசிப் பழகி, அறிந்து உணர்ந்த பாத்திரங்களையே உயிர்ப்பித்திருக்கிறேன். தன்னார்வத் தொண்டியக்கங்கள் வாயிலாக, இந்நாட்டின் வேர்களைக் கண்டு புத்துயிரூட்ட முனைந்துள்ள இளைய தலைமுறையினரும் கற்பனையில் உதித்தவரல்லர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/11&oldid=1049374" இலிருந்து மீள்விக்கப்பட்டது