பக்கம்:உத்தரகாண்டம்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20   ✲   உத்தரகாண்டம்

சோகமாக இருந்த நாட்கள். சேவா குருகுலத்துக்குள் இருந்த குடிலில் தான் இவள் பெற்றிருந்தாள். கார்ப்பரேஷன் ஆசுபத்திரி மருத்துவச்சி, சிந்தாமணி வருமுன் இவன் பிறந்துவிட்டான்... பத்துப் பதினைந்து நாட்களிருக்கும்... உள்ளே வந்து அம்மா குழந்தையை வெளியில் எடுத்துச் சென்றாள். குடில் வாசலில் அய்யா...

“என்ன பேரு வச்சிருக்கீங்க?”

இவளுக்குக் குரல் செவிகளில் விழுந்தது...

அவள் புருசனும் பக்கத்தில்தான் நின்றிருந்தான்.

“அய்யா, நல்ல பேரா வையுங்க...”

“அதுசரி, நீ முதல்ல, இனிமே காள்ளுசாராயம் பார்க்கிறதில்லேன்று பிரதிக்ஞை எடுத்துக்க... என்ன? பொண்ணுக பிறந்து சம்சாரி ஆனபிறகு பனந்தோப்புக்கள்ளைத் தேடிட்டுப் போக மாட்டேன்னு நினைச்சேன். நாங்களும் இங்க ஒவ்வொரு குப்பமா போயிப் பிரசாரம் பண்ணுறோம். எங்க நிழலிலேயே இருந்திட்டு நீ மொந்தை போட்டுட்டு வரது வெட்கமாயிருக்கு...”

“இனிமே இல்ல சாமி...”

“இந்த இனிமேக்கு உயிர் உண்டா? நந்தனார் சரித்திரம் தெரியுமா உனக்கு? கள்ளுமொந்தைச் சூழலிலே பிறந்து, சிதம்பரம் போகணும்னு கனவு கண்டார். நாளைக்குப் போவேன், நாளைக்குப் போவேம்பாராம். திருநாளைப் போவார்”னு சொன்னாங்களாம். அது போல் உன்னை ‘இனிமே குடிக்காதவர்’னு சொல்லவா?”

“இல்ல சாமி... நிச்சியமா இனிமே குடிக்கமாட்டேன்...”

“எப்படினாலும் நீ குடிக்க முடியாம வழி பண்ணிடுவோம். ஏன்னா, சுதந்தர சர்க்கார் வந்திடும். உடனே மது விலக்குச் சட்டம் நெறிப்படுத்துவோம்!”

“அப்படி வந்திட்டா, எத்தனை ஏழைகள் மனம் குளிரும்?...” அப்போதுதான் ராதாம்மாவின் குரல் கேட்டது.

“அப்பப்பா, குழந்தையை ஏங்கிட்டக் குடும்மா..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/22&oldid=1049394" இலிருந்து மீள்விக்கப்பட்டது