பக்கம்:உத்தரகாண்டம்.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236   ✲   உத்தரகாண்டம்

னார்கள். ‘கீர்’ ‘கடி’ என்று ஒற்றையாக இருக்கும் அவனுக்கு அந்த அம்மை சிறு கிண்ணத்தில் ஏதேனும் கொண்டு வந்து கொடுப்பாள். அவர்கள் கோலாப்பூருக்குப் போகும்போது, வாயில் முன் கதவுச்சாவி ஒன்றை அவனிடம் கொடுத்து வைப்பார்கள்.

அவனுக்குத் தெரியும் போது, சங்கரியின் அண்ணனும் அண்ணியும் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். மூன்று வயசில் ஒரு பெண் குழந்தை. இன்னும் கொஞ்சம் பெரியவனாக ஒரு பையன்; கைக்குழந்தை என்று மூன்று குழந்தைகள் இருந்தார்கள். அண்ணன் கறுப்பாக, தாட்டியாக இருப்பான். மனைவியும் பருமன்தான். காலையில் எட்டரை மணிக்கு அவர்கள் பைக்கில் வேலைக்குச் செல்வார்கள். கைக்குழந்தை சங்கரியின் இடுப்பில் இருந்து அழும். பிறகு டாடா சொல்லும்.

இதெல்லாம் செவிவழிக்காட்சிகள் தாம். முன்கூடத்தில் ஒரு கட்டிலில் பெரியம்மா, படுத்திருப்பார். நலிந்த குரலில் அவள், “சங்கரி, புள்ள தொட்டில்ல என்ன பண்ணிருக்கான் பாரம்மா, முருகா, என்னிய இப்படிச் சோதிக்கிறியே?” என்று புலம்புவது செவிகளில் விழும்.

அவனையும் அறியாமல், அந்தக் குடும்பத்தில் உள்ள சங்கரி யார் என்று தெரிந்து கொள்ளும் ஈர்ப்பு... குடியேறியது என்று இப்போது தோன்றுகிறது.

அந்த மூன்று வயதுக் குழந்தை அருகேயுள்ள ஒரு பாலபவனத்துக்குப் போய்க் கொண்டிருந்தது. ஐந்தாறு வீடுகள் தள்ளி உள்ள அந்த மழலைப் பள்ளிக்குக் காலையில் அம்மாவோ, அப்பாவோ கொண்டு விடுவாரோ, அல்லது ஆயா யாரேனும் இருந்தார்களோ? ஒருநாள் மதியம், சங்கரி இடுப்பில் கைக்குழந்தையுடன் இந்தக் குழந்தையைப் பள்ளியில் இருந்து அழைத்து வந்ததை அவன் பார்த்தான். அவள் தலை குனிந்து நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/238&oldid=1050238" இலிருந்து மீள்விக்கப்பட்டது