பக்கம்:உத்தரகாண்டம்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24   ✲   உத்தரகாண்டம்


மிசின் ஓட்டத்தோடு, அவன் யாரையோ திட்டிக் கொண்டிருந்தான். அவளுடைய வளாகத்துக்கு வெளியேயுள்ள ‘தமிழ்’ மொழியே அவளுக்குப் புரியாது. ஏனெனில் அவர்கள் கிராமத்தில் இப்படி ‘கீது, கிறாரு’ என்ற மொழி பேசிக் கேட்டதில்லை.

“ஏம்ப்பா, ராசமணி இருக்கிறாரா?”

அவன் நிமிர்ந்தான். அடர்ந்த முடி பின்பக்கம் விழுந்தது. அடர்ந்த மீசை, “ஏம்மே? நாந்தா ராசமணி?”

ஒரு கணம் திகைத்துவிட்டு, “ஏம்ப்பா, நான் தாயம்மா... என்னைத் தெரியல? அப்பாரு செளக்கியமா? ரொம்ப நாளாயிடிச்சி, உன்னையும் எனக்கு அடையாளம் தெரியல, எனக்கும் உன்னை அடையாளம் தெரியல...” என்றாள்.

“அடே...டே...ஆமாம்! தியாகிவூட்டு வேலைக்காரங்களாச்சே? இளவழகு இப்பதா காஞ்சிவரம் புறப்பட்டுப் போச்சி... உம்புள்ள ஒரு அருமையான நாடகம் எழுதிருக்கு. அத்தப்பத்திப் பேசத்தா, தலைவரு கூப்பிட்டனுப்பிச்சாரு. நாந்தா புதுச்சட்டை தச்சிகுடுத்தேன். போட்டுட்டுப் போயிருக்கு...”

அவளுக்கு அப்போதுதான் புரிந்தது. இது முளை இல்லை, வேர்விட்டு விட்ட பயிர் என்று தெரிந்து கொண்டாள். அவன் குருகுலப் பள்ளியை விட்டு வெளிச் செல்லத் துடித்த காரணம் அப்போது தெரியவில்லை. இந்தக் கதர், பிரார்த்தனை, உடற்பயிற்சி, இந்தி, தமிழ், ஆங்கிலம் என்ற மரத்தடி வகுப்புகள் எல்லாமே பிடிக்கவில்லை. எப்போது முரண்டு செய்யத் தொடங்கினான் என்றே குறிப்பாகச் சொல்ல முடியாது. காலை ஆறு மணிக்கு எழுந்திருக்க மாட்டான். உடற்பயிற்சி ஆசிரியர் மருதமுத்து அவனை வீட்டின் முன் வந்து காதைத் திருகி அழைப்பார்.

“எந்நேரம் துரங்குறான்? எந்திரிடா ?” என்று சந்திரி பாயில் இருந்து தள்ளி உருட்டுவாள். சிற்றப்பன் ஒருவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/26&oldid=1049403" இலிருந்து மீள்விக்கப்பட்டது