பக்கம்:உத்தரகாண்டம்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48   ✲   உத்தரகாண்டம்


டக்கென்று சிமிட்டிப் பலகை போடப்பட்ட நடை பாதையில் ஏறுகிறாள். வரிசையாகக் கடைகள். ‘நடைபாதை’ என்று போடப்பட்ட சிமிட்டிப்பலகைகள் வரிசையாகப் பெயர்க்கப்பட்டு இடுக்குகளில் குடியிருக்கும் குடும்பங்களைக் கரையேற்றிக் கொண்டிருக்கின்றன. புத்தகங்கள், பழைய பத்திரிகைகள் என்று அடுக்கி வாணிபம் செய்யும் கடைக்கும், ஜிராக்ஸ் என்ற பலகையின் பின் உள்ள இடுக்குக்கும் இடையே ஒரு குழந்தை அழுது கொண்டிருக்கிறது. வெயில் பட்டுப் பட்டுச் சவுங்கிப் போன மாதிரியான முகமுடைய பெண் ஒருத்தி, இடுப்பில் பிளாஸ்டிக் குடத்தில் நீருடன் வருகிறாள்...

“எந்தா.. அம்மே. தியாகி எஸ்.கே.ஆர். வீட்டம்மையில்ல?” இவருக்கு நினைவுப் பொறி தட்டுகிறது.

அவள் உள்ளே செல்ல வழிவிடுவது போல் கீழே அழும் பெண் குழந்தையை இடுப்பில் எடுத்துக்கொள்கிறாள்.

“நீ. சிவலிங்கத்தின் சம்சாரமில்ல?”

“ஆமாம். நல்ல நினைப்பு வச்சிருக்கிறீங்க...” என்று குழந்தையை வாங்கிக் கொண்டு, “உள்ள வாங்கம்மா, வாங்க..” என்று கூப்பிடுகிறாள்.

“நான் இப்ப உள்ள வர்றதுக்கில்லம்மா. உன் பேரு மறந்து போச்சி... நான் இப்ப ஒரு துட்டிக்குப் போயிட்டுவரேன். வேண்டப்பட்ட ஒருவர் இறந்து போயிட்டார். இங்க தான் பக்கத் தெருவில்-”

“ஓ... மருந்துக்கடை சாயபுவா?... நேத்தே காலம, உடம்பு சரியில்லன்னு சங்கரி நர்சிங் ஹோமுக்குக் கூட்டிப் போனாங்க. ராமுண்ணிசேட்டன் மோன் இன்ஜினிரிங் காலேஜில படிக்கிது. அதைப்பாக்கணும்னு சொன்னாராம். இப்பதா, குழாயடில, மரகதம் ஆயா சொல்லிட்டிருந்தது. அவங்க நைட் முடிச்சிட்டுப் போகுது...”

என்ன சொல்கிறாள் இவள்?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/50&oldid=1049461" இலிருந்து மீள்விக்கப்பட்டது