பக்கம்:உத்தரகாண்டம்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    79

மாணிக்கக் கொடி தாறுமாறாகப் படர்ந்திருந்ததை ஒருநாள் இரவு ஒழுங்கு செய்து காண்டிருந்தார். குடிசைக்கு வெளியே ஒரு மின்விளக்கு உண்டு. இவரை நாம் எதற்காகக் கண் காணிக்கிறோம் என்று தெரியாமலே அவள் பார்த்தாள். ஒருநாள் இரவு ரங்கன் கூறியதுபோல் அவர் பட்டையான சிறு பாட்டிலில் இருந்து குடிப்பதைக் கவனித்தாள். என்றாலும் அவளுள் அவர் மீது இருந்த மரியாதை போகவில்லை.

ஒரு வருசமோ என்னமோ அவர் இருந்த காலத்தில், முன்னும் பின்னும் இருந்திராதபடி, பஜனை நிகழ்ந்தது. முடிவில் அவர் தாம் ஓம்... சாந்தி... சாந்தி... என்று பாடுவார். அனைவரும் கண்களை மூடி இலயித்திருப்பார்கள். அதில் சில வார்த்தைகள் இன்னும் அவள் நினைவில் மின்னுகின்றன. பிருதிவி சாந்தி... ஆப... சாந்தி... அந்தரிகூடிம் சாந்தி... இந்தப் பாட்டைச் சொல்லுமுன் இதன் பொருளை அவர் எடுத்துச் சொன்னார். “எல்லாம் உலகத்தில் சாந்தியடையணும். நீர் நிலைகள், கடல், மரங்கள், வளங்கள், மூலிகைகள், ஆகாசம், எல்லாமே அமைதியாக இருக்க வேணும். பசு, பட்சி மட்டுமில்லாமல்... இதற்கெல்லாமும் உயிர், துடிப்பு, உணர்வு எல்லாம் இருக்கு. மனிதனுக்கு ஆண்டவன் பகுத்தறிவு கொடுத்திருக்கிறான். நாம் இணக்கமாக வாழ்ந்து, அமைதியாக, யாருக்கும் தீமை கொடுக்காமல் இயற்கையை நேசிக்க வேணும். ஒரு போர் ஏன் வருகிறது?... மனிதன் இந்த விதியை பகுத்தறிவினால் மீறி, இம்சை செய்கிறான்...”

அவர் சொற்கள் இனிய நாதம் போல் விழுகின்றன.

‘தம்பி?’ உன்னை ஏன் அந்த ஆண்டவன் இப்படி எடுத்துக் கொண்டான்? ‘நிர்வாண தேசத்தில் ஒரு கையகலத் துணி கொண்டு மானம் மறைத்தவன் பைத்தியக்காரனா? நீ அப்படித்தான் யமனுக்குப் பிடித்தவனானாயா? அவளாகக் காலையில் அவர் எழுந்திருப்பதற்கு முன் அந்த முன் வாயிலில் சாண நீர் தெளித்துப் பெருக்க முனைந்த போது அவர் வெளியே வந்து “அம்மா, இருங்க; நீங்க என்ன இதெல்லாம் செய்ய?...” என்று துடைப்பத்தைப் பிடுங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/81&oldid=1049540" இலிருந்து மீள்விக்கப்பட்டது