பக்கம்:உத்தரகாண்டம்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    85

இருந்ததாம். ரங்கன் வெந்த புண்ணில் வேல் செருகும் நியாயத்தைச் சொன்னான்.

“என்னமோ, இல்ல இல்லன்னிங்களே? குடி... அதான் மாரடச்சி உசிர் போயிடிச்சி, மக்க மனிசங்க யாரும் வரவில்ல...”

அவனை எரித்து விடுபவள் போல் பார்த்தாள். “இப்ப என்னத்துக்கு இந்த நியாயம்? அவுரு எப்படிப் போனா என்ன? போயிட்டாரு...” என்றாள்.

அன்றைய பஜனையில், அவரைப் பற்றி பஞ்சாபிக்காரர், நிக்கொலசு, சாயபு எல்லோருமே பேசினார்கள்.

“சுதந்தர நாட்டின் உண்மையான தேசியவாதி. பல வகையான ஆற்றல், திறமை, வீரம், துணிவு எல்லாம் கூடிய அற்புத மனிதர். உயிர்களைக் கொல்லும் ஒரு சேவையில்- தாய்நாட்டுக்குச் சேவையில் இருந்து, வீரம் காட்டி வென்றும் பணியைத் தொடராமல், அஹிம்சை வழி வந்தவர். உலகம் முழுவதும், போர்ப்படைகள் இல்லாமல் ஒருவருக்கொருவர் என்று வாழனும்னு சொல்வார்”..... என்றெல்லாம் நிக்கொலஸ் பேசினார். அவரும் இராணுவத்தில் இருந்தவர். அவர் பையன் டாக்டராகத் தொழில் செய்பவன். அவன் கூடப் பேசினான். “அங்கிள், நீங்கள் அதிகமாக ஃபிஸிகல் ஸ்ட்ரெயின் பண்ணிக்கக் கூடாதுன்னு சொன்னேன். அவர் எதையும் பொருட்படுத்தியதில்லை. “இதபாரு ஜார்ஜ், நான் நினைக்காமலே எனக்கு மரணம் ஒரு இனிமையான முடிவாக இருக்கணும், கர்நாடக சங்கீதத்தில் - மும்மணிகள்னு சொல்லுவாங்க. அதில் ஒருத்தர் முத்துசுவாமி தீட்சிதர். அவர் எட்டையபுரத்தில்தான் அமரரானதாகச் சொல்றாங்க. பாரதியின் ஜன்ம பூமி. அவர், தமக்கு முடிவு வரும்னு முன்னமேயே அறிந்திருந்தார்னு சொல்றாங்க. சீடர்களெல்லாம் இருக்க, பாடிட்டே இருந்தாராம். “மீனாட்சி மேமுதம்னு, பாட்டு, “மீனலோசனி, பாசமோசனி..."ன்னு குரலெழுப்பிப் பாடறப்ப, சமாதியாயிட்டாராம். ‘பாசம்’ விடுபட்டு, அம்பிகையின் மடிக்குப் போயிட்டார்னு சொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/87&oldid=1049551" இலிருந்து மீள்விக்கப்பட்டது